தமிழக வாலிபர்கள் சித்ரவதை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
தமிழக வாலிபர்கள் சித்ரவதை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
தமிழக வாலிபர்கள் சித்ரவதை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு
ADDED : ஜூலை 08, 2024 05:50 AM
சென்னை : தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அழைத்து சென்று, 'ஆன்லைன்' மோசடியில் ஈடுபடச் சொல்லி சித்ரவதை செய்வது தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக நம் நாட்டைச் சேர்ந்த, 20 - 24 வயதுடைய வாலிபர்களை, கும்பல் ஒன்று கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் செல்கிறது. இதற்காக, அந்த கும்பல் நாடு முழுதும் முகவர்களை நியமித்துள்ளது.
தமிழகத்திலும் அந்த கும்பல் செயல்படு வதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காவல் நிலைய எல்லையில், சட்ட விரோத கும்பலை சேர்ந்த முகவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்தக் கும்பலில் இருவரை கைது செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.
சட்ட விரோத கும்பல், தென் கிழக்கு நாடுகளில், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி தரப்படும் என, 'ஆன்லைன்' வாயிலாக விளம்பரம் செய்கிறது.
தங்கள் வலையில் விழும் நபர்களை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு, 'பெட்எக்ஸ் கூரியர் ஸ்கேம்' உள்ளிட்ட 'ஆன்லைன் மோசடிகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.
தினமும், 100 நபர்களிட மாவது பண மோசடி செய்து தர வேண்டும். எண்ணிக்கை குறைந்தால், அடித்து சித்ரவதை செய்கின்றனர்.
நம் நாட்டில் இருந்து அழைத்து செல்லப்படும் வாலிபர்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர் என்பது, தொடர் விசாரணையில் தெரியவந்தது.
இதன் பின்னணியில் மிகப்பெரிய, 'நெட்வொர்க்' இருப்பதால் வழக்கு விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், வேலை தரும் நிறுவனம், அது தொடர்பான விளம்பரங்களின் உண்மைத் தன்மையை, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ், சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் புலம் பெயர்வோரின் பாதுகாவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும்; 044 - 2986 2069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை வாய்ப்பு குறித்து, பிரதான செய்தித்தாள்களில் விளம்பரம் வந்தால், அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க, உள்ளூர் காவல் நிலையத்தை அணுக வேண்டும் என்றும், டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.