Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ குக்கிராமங்களுக்கு சாலை வசதி: ரூ.4,000 கோடி கேட்கிறது தமிழகம்

குக்கிராமங்களுக்கு சாலை வசதி: ரூ.4,000 கோடி கேட்கிறது தமிழகம்

குக்கிராமங்களுக்கு சாலை வசதி: ரூ.4,000 கோடி கேட்கிறது தமிழகம்

குக்கிராமங்களுக்கு சாலை வசதி: ரூ.4,000 கோடி கேட்கிறது தமிழகம்

ADDED : ஜூலை 26, 2024 12:51 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: பிரதமரின் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியை, இரண்டு மடங்கு அதிகரிக்க, மத்திய அரசிடம், தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பிரதமரின் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு, 2014 வரை 100 சதவீத நிதியை, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. ஆனால், 2015 முதல் 60 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத நிதியை, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், இணைப்பு சாலை வசதி இல்லாத 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களுக்கு, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தும் வகையில், சாலைகள் அமைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ், 2019 வரை தமிழகத்தில் 16,296 கி.மீ., ஊரக சாலைகள், 98 பாலங்கள் கட்டுமான பணிகளுக்கு, 4,586 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, குக்கிராமங்களுக்கு அருகில் உள்ள சந்தை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணி, 2019ல் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 2023 வரை 4,449 கி.மீ., சாலைகள், 55 பாலங்கள், 2,883 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும், 2023 - 24ம் ஆண்டு 2,869 கி.மீ., சாலைகள், 28 பாலங்கள் அமைப்பதற்கு, 1,945 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. சாலை பராமரிப்பு பணிக்கான ஊக்கத்தொகையாக, 80 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகம் வளர்ந்த மாநிலம் என்பதால், ஊரக சாலை மேம்பாட்டு நிதியை, மத்திய ஊரக வளர்ச்சி துறை குறைத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் குழுவினர், சமீபத்தில் டில்லி சென்று, மத்திய அமைச்சர்கள், துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்தனர்.

அப்போது, 'தமிழகத்திற்கான நிதியை, வளர்ச்சியை காரணம் காட்டி குறைக்க கூடாது. பல கிராமங்களுக்கு சாலை வசதியை மேம்படுத்த வேண்டியுள்ளது. நடப்பாண்டுக்கான நிதியை, 4,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us