முடிந்தது கோடை விடுமுறை: பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
முடிந்தது கோடை விடுமுறை: பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
முடிந்தது கோடை விடுமுறை: பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
UPDATED : ஜூன் 10, 2024 02:02 PM
ADDED : ஜூன் 10, 2024 06:05 AM

சென்னை: ஒன்றரை மாத கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில், மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க, பள்ளிகள் ஏற்பாடு செய்து உள்ளன.
பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்ரல் 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. புதிய கல்வி ஆண்டில், ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தன.
லோக்சபா தேர்தல் முடிவு ஜூன் 4ல் வெளியாக இருந்ததால், பள்ளி திறப்பு ஜூன் 6க்கு மாற்றப்பட்டது. பின், வட மாவட்டங்களில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக, பள்ளி திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், இன்று மீண்டும் துவங்கின. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், இன்று முதல் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இன்று பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் அட்லஸ் வரைபட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, விடுமுறையிலேயே பாட புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், முதல் நாளான இன்று புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகள் மற்றும் உளவியல் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.