அமலாக்கத்துறை வழக்கு செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
அமலாக்கத்துறை வழக்கு செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
அமலாக்கத்துறை வழக்கு செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 19, 2024 12:55 AM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என, அறிவித்திருந்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாக தாக்கல் செய்த மனுக்கள் மீதான வாதங்களை, இரு தரப்பும் முன்வைத்தனர்.
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, தாக்கல் செய்த மனு உள்பட, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த புதிய மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.அல்லி, அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, வரும் 22ம் தேதி, செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் வரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்தும் உத்தரவிட்டார்.