Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சந்துரு அறிக்கையின் பரிந்துரையை ஏற்கக்கூடாது: ஹிந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

சந்துரு அறிக்கையின் பரிந்துரையை ஏற்கக்கூடாது: ஹிந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

சந்துரு அறிக்கையின் பரிந்துரையை ஏற்கக்கூடாது: ஹிந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

சந்துரு அறிக்கையின் பரிந்துரையை ஏற்கக்கூடாது: ஹிந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

ADDED : ஜூன் 20, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையின் பரிந்துரைகள், ஒரு சார்பாக இருக்கின்றன; அவற்றை ஏற்கக்கூடாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்; பல்வேறு ஹிந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில் ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு அறிக்கையை நேற்று முன்தினம் நீதிபதி சந்துரு, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: பள்ளிக்கூடத்தில் ஜாதி இருக்கக் கூடாது; ஜாதிய மோதல் இருக்கக் கூடாது என்பது தான் பா.ஜ.,வின் கருத்து. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்கள் உள்ளன. சீர்மரபினர், ஆதிதிராவிடப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதில் பா.ஜ.,வுக்கு உடன்பாடு கிடையாது.

சில சமூகத்தினருக்கு சிறப்பு சலுகைகள் தொடர்ந்து இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் அமைந்துள்ள இடத்தில் உள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆசிரியராக வரக்கூடாது என்று கூறப்பட்டிருப்பதை எதிர்க்கிறோம். ஆசிரியரை ஜாதியை பார்த்து பள்ளியில் நியமிக்கக் கூடாது.

Image 1283429
வகுப்பறையில் மாணவர்களுக்கான இருக்கை ஒதுக்கீட்டை, அகர வரிசைப்படி ஒதுக்க வேண்டும் என்பது ஏற்கக்கூடியதல்ல. இதற்கும், ஜாதிய மோதலுக்கும் என்ன தொடர்பு உள்ளது. ஆசிரியர்களுக்கு கண்டிக்கக்கூடிய அதிகாரம் வழங்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். தவறு செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. கயிறு கட்டுவது, விபூதி, குங்குமம் வைத்திருப்பதை வைத்து ஹிந்து சமூகத்தினர் என்று அடையாளப்படுத்துவர் என்று கூறுவதை ஏற்க முடியாது. கிறிஸ்துவ ஆசிரியர்களே, மதச் சின்னத்தை அணிந்து வருகின்றனர்.

சந்துரு அறிக்கையால், தமிழகத்தின் பன்முகத்தன்மை எங்கே போய் நிற்கும் என்று தெரியாது. பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து சமூக நீதி படை உருவாக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இது, என்ன பிரச்னைக்கு தீர்வு காணப் போகிறது. மாணவர்களுக்கு இது தேவையா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. சந்துரு அறிக்கை, ஒரு சார்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

தமிழகத்தில் சாதாரண தேர்தல் கூட, ஜாதியை வைத்து தான் நடக்கிறது. பள்ளிகளில் தேர்தல் நடத்த ஆரம்பித்தால், ஜாதி அரசியல் எட்டிப் பார்க்கும். பள்ளிகளில் ஜாதியும், ஜாதி வன்முறைகளும் இருக்கக்கூடாது என்பது பா.ஜ.,வின் நிலைப்பாடு. சந்துரு அறிக்கையை ஏற்றால், இன்றைக்கு இருப்பதை விட அதிக பிரச்னைகள் ஏற்படும்.

ஒவ்வொரு கோவிலிலும், ஒரு கயிறு கட்டப்படுகிறது. இதற்கு ஜாதியை அடையாளப்படுத்தக் கூடாது. மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் தேர்தல் நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:



பள்ளி மாணவர்கள் நெற்றியில் திலகமிடுவது, கைகளில் கயிறு கட்டுவது போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என, நீதிபதி சந்துரு கூறியுள்ளார். கர்நாடக பள்ளிகளில் ஹிஜாப் அணிவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியதும், முஸ்லிம் மத நம்பிக்கைக்கு எதிராக பா.ஜ., அரசு செயல்படுகிறது என்று கூறியவர்கள் தி.மு.க.,வினர்.

இன்று மாணவர்கள் நெற்றியில் திலகமிடுவது, ருத்ராட்சம் அணிவது, கைகளில் கயிறு கட்டுவது குறித்து தடை விதிக்க வேண்டும் எனக் கூறுவது நியாயமா?

ஜாதி விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும் எனக் கூறும் குழு, பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது, ஜாதிகளை கேட்கக்கூடாது என்று பரிந்துரைக்கலாமே?

ஜாதிகளை ஒழிக்க, ஜாதி பெயர்களில் உள்ள ஊர்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். ஆபத்தான இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றி, தாலுகாவுக்கு ஒரு சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்கி, அங்கு சிலைகளை வைக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் ஜாதி தலைவர்கள் ஆதரவை பெற்று, தேர்தல் முடிந்த பின், ஜாதிகளை ஒழிக்க முயற்சி செய்கிறோம் என்பது என்ன நியாயம்? அரசு பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள், ஊழியர்கள், ஜாதி சங்கங்கள் நடத்தும் விழாக்களில் பங்கேற்க, அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது போன்று பல்வேறு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈரோடு உள்ளிட்ட சில இடங்களில், சந்துரு குழு அளித்த அறிக்கையை கிழித்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us