கூட்டணி அரசு நடத்துவது ரொம்ப சிரமமான காரியம் * சொல்கிறார் சிதம்பரம்
கூட்டணி அரசு நடத்துவது ரொம்ப சிரமமான காரியம் * சொல்கிறார் சிதம்பரம்
கூட்டணி அரசு நடத்துவது ரொம்ப சிரமமான காரியம் * சொல்கிறார் சிதம்பரம்
ADDED : ஜூன் 07, 2024 08:47 PM

சென்னை:''தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் அடக்கத்தை கற்று தந்துள்ளனர். எதிர்க்கட்சி என்ற முறையில், அரசின் செயல்பாடுகளை கண்காணிப்போம்,'' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னையில் சத்தியமூர்த்தி பவனில், அவர் அளித்த பேட்டி:
தேர்தலில் மக்கள் பா.ஜ.,வுக்கு அடக்கத்தை கற்று தந்துள்ளனர். நாளை மோடி மீண்டும் பிரதமராகிறார். அவர் தன்னை நேருவுடன் ஒப்பிட்டு கொள்கிறார். அவருக்கு கிடைத்த தொகுதிகள், மோடிக்கு கிடைக்கவில்லை. அவர் தன்னை நேருவுடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிராகரிக்கிறோம்.
மூன்றாம் முறை பிரதமராக பொறுப்பேற்கும் மோடியை, குடிமகன் என்ற முறையில் வாழ்த்துகிறோம். எதிர்க்கட்சி என்ற முறையில், அரசு செயல்பாடுகளை கண்டிப்பாக கண்காணிப்போம். தேர்தல் அனைவருக்கும் படிப்பினை தான். சில மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. அது எங்களுக்கு படிப்பினை தான்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை நாங்கள் நிராகரிக்கவில்லை. 'விவிபேட்' இயந்திரத்தில் வரும் ஒப்புகை சீட்டை, வாக்காளர் கையில் எடுத்து பெட்டியில் போடும் வசதி ஏற்படுத்தினால், யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.
இப்போதும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சிலர் சந்தேகிக்கின்றனர். நான் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறியதில்லை. அதை மேலும் செம்மைப்படுத்தி, சீர்திருத்த வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலை.
தேர்தலில் காங்கிரசுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. மோடிக்கு தார்மீக தோல்வி கிடைத்துள்ளது. அவர்கள் களையிழந்து இருக்கின்றனர்; நாங்கள் கொண்டாடுகிறோம். நிலையான அரசை கொடுக்க முடியுமா என்பதை, மோடி தான் கூற வேண்டும்.
இந்திய பொருளாதார உயர்வுக்கு ஏற்ப, பங்கு சந்தை உயர்ந்தால் ஏற்கலாம். ஆனால், இந்திய பொருளாதாரம் ஓரளவு உயர்கிறது; பங்கு சந்தை பெருமளவு உயர்கிறது என்றால், அது பங்கு சந்தை வளர்ச்சி அல்ல; பங்கு சந்தை வீக்கம்.
யாரோ பணம் எடுக்கின்றனர்; யாரா பணத்தை இழக்கின்றனர். ஒருவருக்கு லாபம் என்றால், மற்றொருவருக்கு இழப்புதான். இதில், இந்தியாவில் உள்ள 142 கோடி மக்களில், 140 கோடி பேருக்கு சம்பந்தமே இல்லை.
மோடி அரசியல் சாசனத்தை வணங்கியதை வரவேற்கிறேன். அரசியல் சாசனத்தை வணங்கிவிட்டு, அதை குலைக்க விடாமல் தடுக்க, இண்டியா கூட்டணிக்கு 234 இடங்களை மக்கள் தந்துள்ளனர். எல்லா மாநில கட்சிகளையும் இணைத்து, கூட்டணி அமைப்பது எளிதான காரியமல்ல. கூட்டணி அரசு நடத்துவது, அதை விட சிரமமான காரியம். அந்த அனுபவம் காங்கிரசுக்கு உள்ளது. நாளை மோடிக்கு அந்த அனுபவம் துவங்க உள்ளது. எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.