ஆர்.ஓ., குடிநீரிலும் கவனம் தேவை: ஐ.ஐ.டி., எச்சரிக்கை
ஆர்.ஓ., குடிநீரிலும் கவனம் தேவை: ஐ.ஐ.டி., எச்சரிக்கை
ஆர்.ஓ., குடிநீரிலும் கவனம் தேவை: ஐ.ஐ.டி., எச்சரிக்கை
ADDED : ஜூலை 19, 2024 01:01 AM

சென்னை:'சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ., குடிநீர் சுத்தமானது தான்; ஆனால், நீரைப் பிடிக்கும் பாத்திரங்கள் சுத்தமாக இல்லையெனில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் பாதிப்பை ஏற்படுத்தும்' என, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் வேதியியல் துறை பேராசிரியர் தாளப்பில் பிரதீப் மற்றும் டெல் அவிவ் பல்கலையின் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் பேராசிரியை ஹடாஸ் மேமன் ஆகியோர் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர், பொதுமக்கள் பருகும் குடிநீரின் தரம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
பாக்டீரியா பரவல்
இதற்காக, சென்னையில் ஆர்.ஓ., முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளை பொது மக்களிடம் பெற்று, ஆய்வு செய்தனர்.
அதில், ஆர்.ஓ., குடிநீரிலேயே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அதிக அளவில் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நுண்ணுயிரிகள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகளை உடலளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும்.
எனவே, நாம் பருகும் நீரில் கலந்துள்ள பாக்டீரியா நுண்ணியிரிகளை அழிக்கும் வகையில், யு.வி., என்ற 'அல்ட்ரா வயலெட்' எல்.இ.டி., விளக்கு கருவியையும், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் டெல் அவிவ் பல்கலையின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, பேராசிரியர் தாளப்பில் பிரதீப் அளித்த பேட்டி:
சுத்தமான குடிநீரை பெறுவதற்கு, ஆர்.ஓ., சுத்திகரிப்பு முறையே சரியானதாகும். ஆர்.ஓ., சுத்திகரிப்பு முறை மிகவும் பாதுகாப்பானது. ஆனால், ஆர்.ஓ., சுத்திகரிப்பு நீரை நாம் சேகரிக்கும் பாத்திரங்கள், டம்ளர்கள் உள்ளிட்ட கலன்களை சுத்தமாக வைத்திருப்பதில்லை. இந்த பாத்திரங்களை, நுண்ணுயிரிகள் நீங்கும் வகையில் சரியாக சுத்தம் செய்வதில்லை.
விரலால் ஆபத்து
சுத்தம் செய்தாலும், அவை மணிக்கணக்கில் திறந்த நிலையில் இருக்கும் போது, அதில் நுண்ணுயிரி கள் படிவது சாதாரணமாகிறது. மேலும், குடிநீர் அருந்தும் டம்ளர்களின் உள்பகுதியை, நம் விரல்களால் தொடுவதும், குடி நீரில் நுண்ணுயிரிகள் கலக்க காரணமாகி விடுகிறது.
அதனால், குடிநீரை சேகரிக்கும் பாத்திரங்களை சுத்தமாக பராமரிப்பதும், அதை சுத்தமாக பயன்படுத்துவதும் அவசியம்.
மேலும், ஆர்.ஓ., கலன்களிலோ அல்லது நீர் சேகரிக்கும் பாத்திரங்களிலோ, நுண்ணுயிரிகள் இருந்தால், அவற்றை யு.வி., - எல்.இ.டி., நீல விளக்கு ஒளியை பாய்ச்சி, டி.என்.ஏ., பிளவு முறையில் அழித்து விடலாம். அதற்கான யு.வி., - எல்.இ.டி., நீல விளக்கு கருவியை கண்டறிந்துள்ளோம்.
நொடியில் சுத்தம்
அந்த விளக்கு ஒளியை நீரில் பாய்ச்சும்போது, சில வினாடிகளிலேயே நுண்ணுயிரிகளின் மரபணுக்கள் உடைக்கப்பட்டு, 100 சதவீதம் அழிந்து விடும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் குறைந்த விலையில், அதை வாங்கி பயன்படுத்தும் வகையில், யு.வி., - எல்.இ.டி., விளக்கு கருவிகளை தயாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.