கூடுதல் சம்பளத்தை திரும்ப பெற நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து
கூடுதல் சம்பளத்தை திரும்ப பெற நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து
கூடுதல் சம்பளத்தை திரும்ப பெற நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து
ADDED : ஜூன் 18, 2024 04:59 AM
சென்னை : கூடுதலாக வழங்கிய சம்பளத்தொகை 91,988 ரூபாயை, நீதிமன்ற அலுவலக உதவியாளரிடம் இருந்து திரும்ப பெற உத்தரவிட்ட, கடலுார் நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடலுார் நீதிமன்றத்தில் துாய்மை பணியாளராக நியமிக்கப்பட்டு, பின், 2012ல் அலுவலக உதவியாளராக பதவி உயர்வு பெற்றவர் கலைமணி; அலுவலக உதவியாளராக நியமிக்கப்பட்ட பின், சம்பள விகிதம் மாற்றப்பட்டது; ஊக்க ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின், உயர் நீதிமன்ற தணிக்கை பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில், கலைமணியின் சம்பள விகிதத்தை மாற்றி அமைத்து, கடலுார் சிறப்பு சார்பு நீதிபதி உத்தரவிட்டார். கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறி, 91,988 ரூபாயை கலைமணியிடம் திரும்ப வசூலிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கலைமணி மனுத்தாக்கல் செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் ஆஜராகி, ''சம்பள விகிதம் நிர்ணயம் செய்ததில், மனுதாருக்கு எந்த பொறுப்பும் இல்லை. நீண்ட நாட்களுக்கு பின், திரும்ப வசூலிப்பது அவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே, உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
துாய்மை பணியாளராக பணியாற்றி, பின், அலுவலக உதவியாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சம்பள விகிதம் நிர்ணயம் செய்ததில், தணிக்கை துறை தவறை கண்டுபிடித்து, கூடுதல் சம்பள தொகை மற்றும் அலவன்ஸ் தொகையை வசூலிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், மனுதாரர் தவறு எதுவும் செய்து இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும், தவறை சரி செய்ய துறைக்கு அதிகாரம் உள்ளது.
எனவே, கூடுதல் சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகையை திரும்ப வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்கிறோம். திருத்தப்பட்ட சம்பள விகிதம் உறுதி செய்யப்படுகிறது. சம்பள விதி மற்றும் அரசு உத்தரவின்படி, திருத்தப்பட்ட சம்பளத்தை பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.