Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கொலை சம்பவங்களால் தமிழகத்தில் பதற்றமான சூழல் கட்சி தலைவர்கள் கவலை

கொலை சம்பவங்களால் தமிழகத்தில் பதற்றமான சூழல் கட்சி தலைவர்கள் கவலை

கொலை சம்பவங்களால் தமிழகத்தில் பதற்றமான சூழல் கட்சி தலைவர்கள் கவலை

கொலை சம்பவங்களால் தமிழகத்தில் பதற்றமான சூழல் கட்சி தலைவர்கள் கவலை

ADDED : ஜூலை 06, 2024 10:54 PM


Google News
சென்னை:'பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதன் விபரம்:

மத்திய அமைச்சர் முருகன்: தமிழகத்தில் நடந்து வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கும், அக்கட்சியின் மாவட்ட செயலராக இருப்பவருக்கும் பாதுகாப்பு இல்லை.

அதுவும், சென்னைபெரம்பூர் போன்ற முக்கிய நகர்ப்புறத்தில் சமூக விரோத கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடுவது, போலி திராவிட மாடல் தி.மு.க., அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல் துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து, சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே, இந்த படுகொலை நிரூபித்துள்ளது.

பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை: நம் சமூகத்தில், வன்முறைக்கும், மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து விட்டு, மாநிலத்தின் முதல்வராக தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்.

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்: சென்னையில், அதுவும் முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏ., வாக உள்ள கொளத்துார் அருகிலேயே தேசிய கட்சியின் மாநில தலைவர் கொல்லப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அமைதி பூங்காவான தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த மூன்று ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் தலைதுாக்கி இருக்கிறது.

போலீசார் முழுக்க முழுக்க தி.மு.க., நிர்வாகிகளின் கட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதுதான் மாநில அரசின் முதல் கடமை. அந்த கடமையில் இருந்து, தி.மு.க., தவறி இருக்கிறது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை, மக்கள் நடமாட்டம் மிகுந்த, சென்னையின் பிரதான இடத்தில் வெட்டி சாய்க்கும் துணிச்சல், ரவுடிகளுக்கு வந்து விட்டது என்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது துளி கூட இல்லை என்பதுதான் அர்த்தம்.

ஒவ்வொரு முறையும் கொலைகள் நடக்கும்போது, தனிப்படை அமைப்பது, ஒரு சிலரை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத் துறை, முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் கொலை சம்பவங்கள், மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர், இனியாவது கும்பகர்ண துாக்கத்தில் இருந்து விழித்து, தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொது மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: சமூக விரோத கும்பலின், கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் பாலகிருஷ்ணன்: இச்சம்பவத்தில் ஈடுபட்ட, உண்மை கொலை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுக்கவும், தொழில்முறை கூலிப்படையினரின் அட்டகாசத்தை அடக்கி ஒடுக்கவும், காவல் துறை, உளவுத்துறை அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தமிழகத்தில் கூலிக்கு கொலை செய்யும் கும்பல், சர்வ சாதாரணமாக நடமாடுவதும், படுகொலைகளை நிகழ்த்தி வருவதும், தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன.

தமிழகத்தின் நலனுக்காக, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு அபாய அறிவிப்பாக, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கு, காவல் துறையினர் இடம் அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us