சட்டசபை தேர்தலில் வெற்றி பழனிசாமி நம்பிக்கை
சட்டசபை தேர்தலில் வெற்றி பழனிசாமி நம்பிக்கை
சட்டசபை தேர்தலில் வெற்றி பழனிசாமி நம்பிக்கை
ADDED : ஜூன் 05, 2024 02:14 AM
சென்னை:'லோக்சபா தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல. வரும், 2026 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
லோக்சபா தேர்தல் முடிவுகள், நாம் எதிர்பார்த்தது போலவே, அதிகார பலம், பண பலம், பொய் பிரசார பலம், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலம் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை, முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல. அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், ஓட்டளித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி.
அ.தி.மு.க.,வை சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்திற்காக கபளீகரம் செய்ய, திரை மறைவிலும், வெளிப்படையாகவும் சூழ்ச்சிகள் நடந்தன.
அதை மிக நுணுக்கமாக புரிந்து கொண்ட தொண்டர்களின் அன்பு கட்டளைக்கு ஏற்ப, 'கொள்கைக்காக வாழ்வோம்; எது வந்தாலும் ஏற்போம்' என்று, தேர்தலில் அ.தி.மு.க., களம் இறங்கியது.
தனித்து நின்றோம்; கொள்கை வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
அ.தி.மு.க., அதிகார பலம் படைத்தவர்களின் நிழலில், மக்கள் நலனையும், மாநிலத்தின் பெருமையையும் இழக்கவில்லை.
பதவி என்பது எங்களை பொறுத்தவரை, மக்களுக்கு பணியாற்ற ஒரு பாதையே தவிர, எல்லா தேர்தலிலும் கொள்கை சிங்கங்களாக அரசியல் களமாடுவோம் என, இந்த தேர்தல் உலகுக்கு உரக்க சொல்லி இருக்கிறது.
இனி அ.தி.மு.க., அவ்வளவு தான் என, முந்தைய தேர்தல்களில் ஆரூடம் கூறி, ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை, கட்சி தொண்டர்களுக்கு உண்டு. இந்த தேர்தல் முடிவுகள், நம்மை சோர்வடைய செய்யாது.
வரும், 2026 சட்டசபை பொதுத்தேர்தலை, எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.