நீக்கப்பட்டோரை அ.தி.மு.க.,வில் சேர்க்க வலியுறுத்தல் பிடிகொடுக்காமல் நழுவிய பழனிசாமி
நீக்கப்பட்டோரை அ.தி.மு.க.,வில் சேர்க்க வலியுறுத்தல் பிடிகொடுக்காமல் நழுவிய பழனிசாமி
நீக்கப்பட்டோரை அ.தி.மு.க.,வில் சேர்க்க வலியுறுத்தல் பிடிகொடுக்காமல் நழுவிய பழனிசாமி
ADDED : ஜூலை 09, 2024 09:46 PM
சேலம்:அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டோரை, மீண்டும் கட்சியில் சேர்க்க, முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்திய நிலையில், அதற்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என, தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், தே.மு.தி.க., உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் தமிழகம், புதுச்சேரி உள்பட, 40 தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டது. முன்னதாக சட்டசபை, உள்ளாட்சி உள்ளிட்ட பல தேர்தல்களிலும், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல், அ.தி.மு.க., ஒதுங்கிக்கொண்டது.
இதற்கு கட்சி பிளவுபட்டு இருப்பதே காரணம் என, அக்கட்சி தொண்டர்கள் இடையே பேச்சு எழுந்தது. இதனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்; அப்போது தான், 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வர முடியும் என, அக்கட்சி தொண்டர்கள் எண்ணுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள, புறநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வந்த மாற்றுக்கட்சியினர், பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
பின், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனிசாமி தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது அவரை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்துள்ளனர். பின், ஆலோசனை நடந்துள்ளது. மூன்று மணி நேரம் நடந்த ஆலோசனையில், கட்சியை ஒருங்கிணைக்க பழனிசாமியை வலியுறுத்தியதாக தகவல் பரவி உள்ளது.
அ.தி.மு.க.,வின் சேலம் முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது:
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்களையும் மீண்டும் கட்சியில் சேர்க்க பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினர்.
அப்போது கட்சியில் இருந்தவர்கள், தனித்தனி அணியாக செயல்படுவதால் தான் தொடர் தோல்வியை கட்சி சந்தித்து வருவதாக சுட்டிகாட்டினர். குறிப்பாக, தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால், பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ஆனால் பழனிசாமி, வரும, 2026 சட்டசபை தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்தும், லோக்சபா தேர்தலில் தோல்வி குறித்தும் மட்டும் விரைவில் ஆலோசனை நடத்தலாம் என கூறினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.