கனிம கொள்ளையால் அரசுக்கு நிதியிழப்பு: சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு
கனிம கொள்ளையால் அரசுக்கு நிதியிழப்பு: சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு
கனிம கொள்ளையால் அரசுக்கு நிதியிழப்பு: சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க உத்தரவு
ADDED : ஜூலை 27, 2024 12:40 AM

சென்னை: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சட்டவிரோத கனிமவள கொள்ளையால், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கவும், கனிம கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், கனிம வளங்கள் திருட்டு நடப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சட்ட விரோதம்
அவரது புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலைய துறைக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை, ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். கிருஷ்ணகிரியில் உள்ள அறநிலைய துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதை பரிசீலித்த பின், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
கோவில் நிலங்களில், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில், சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தேன்கனிக்கோட்டை நாகமங்கலத்தில் உள்ள ஹனுமந்தராயசாமி கோவில் நிலத்தில், 28.51 கோடி ரூபாய் மதிப்பிலும், கிருஷ்ணகிரி பலேகுலியில் உள்ள பட்டாளம்மன் கோவில் நிலத்தில், 170.14 கோடி ரூபாய் மதிப்பிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்கள் மற்றும் இதர நிலங்களில் நடந்துள்ள சட்டவிரோத கனிமவள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், சேலம் சரக டி.ஐ.ஜி., நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, சேலம் சரக டி.ஐ.ஜி., ஆஜரானார். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்தார்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகினர். அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.
அறிக்கையை பரிசீலித்த நீதிபதி, மக்கள் பணத்தில் இருந்து ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள், அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கனிமவள கொள்ளையை பார்க்கும்போது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கனிமங்கள் எடுக்க உரிமம் வழங்கப்பட்ட விபரங்களை, சேலம் சரக டி.ஐ.ஜி.,யிடம் ஒரு வாரத்தில், கனிமவளத்துறை உதவி இயக்குனர் வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில், டி.ஐ.ஜி., ஆய்வு செய்து, சட்டவிரோத குவாரி நடந்திருந்தால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராகவும், குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுக்க, வருவாய் துறை, போலீஸ், அறநிலையத்துறை ஆகியவை ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மீண்டும் விசாரணை
கனிம கொள்ளையால், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பையும் மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க, கனிமவள உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான விசாரணை இன்றி முடிக்கப்பட்ட வழக்குகளை, மீண்டும் விசாரிக்க வேண்டும்.
அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையை, ஆகஸ்ட் 28க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.