ADDED : ஜூலை 08, 2024 12:09 AM

ஜூலை 8, 1972
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், சண்டிதாஸ் --- நிருபா கங்குலி தம்பதியின் மகனாக, 1972ல் இதே நாளில் பிறந்தவர் சவுரவ் கங்குலி.
இவர், கோல்கட்டாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லுாரியில் படித்தார். இளமையில் கால்பந்து விளையாடிய இவர், தன் அண்ணன் சினேகாசிஷ், பெங்கால் கிரிக்கெட் அணி வீரராக புகழடைந்ததால், அவரது பேட்டில், இடது கையால் பயிற்சி செய்தார். கோடையில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
பின், 10ம் வகுப்பு படித்த போது, ரஞ்சி டிராபி அணியில் தன் அண்ணனுக்கு பதிலாக இடம் பெற்றார். 1990ல், இந்திய அணியில் விளையாடி, மூன்று ரன் எடுத்ததால் நீக்கப்பட்டார். 1993 முதல் ரஞ்சி போட்டியில் அதிக ரன் எடுத்ததால், 1996ல் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டு, 131, 136 ரன்கள் என, தொடர்ந்து பல சாதனைகளை படைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி, தொடர்ச்சியாக நான்கு ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 1999ல் இந்திய அணியின் கேப்டனாகி, டெண்டுல்கர் - சேவாக்கை துவக்க ஆட்டக்காரர்கள் ஆக்கினார். ஹர்பஜன் சிங், இர்பான் பதான், தோனி உள்ளிட்டோரை அறிமுகம் செய்த இவரால், இந்திய அணி வெற்றி கோப்பைகளை தட்டி வந்தது. பி.சி.சி.ஐ., தலைவராகி அணிக்கு புது ரத்தம் பாய்ச்சினார்.
இவரது, 52வது பிறந்த தினம் இன்று!