பத்திரப்பதிவில் ஆள் மாறாட்டம் தடுக்க கைரேகை பதிவை சரிபார்க்க புதிய வசதி
பத்திரப்பதிவில் ஆள் மாறாட்டம் தடுக்க கைரேகை பதிவை சரிபார்க்க புதிய வசதி
பத்திரப்பதிவில் ஆள் மாறாட்டம் தடுக்க கைரேகை பதிவை சரிபார்க்க புதிய வசதி
ADDED : ஜூன் 21, 2024 06:21 AM

சென்னை: சொத்து பரிமாற்றத்தில் ஆள் மாறாட்டத்தை தடுக்க, விற்பவரின் கைரேகையை முந்தைய பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் புதிய வசதியை, பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.
சார் -- பதிவாளர் அலுவலகங்களில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்வதில் ஆள் மாறாட்டத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில், சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரின் கைரேகை உள்ளிட்ட, 'பயோமெட்ரிக்' விபரங்கள், புகைப்படங்கள் பெறப்படுகின்றன.
இந்த விபரங்களின் உண்மை தன்மையை, 'ஆதார்' பதிவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதி, அனைத்து அலுவலகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதி இருந்தும், பல இடங்களில் ஆள் மாறாட்டம் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும் போது, விற்பவரின் கைரேகை, அதன் முந்தைய பதிவின் போது பெறபட்டதுடன் ஒத்துப்போக வேண்டும். இதற்கான புதிய வசதி, 'ஸ்டார் 2.0' மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, முந்தைய பதிவுடன், விற்பவரின் கைரேகை ஒத்துப்போனால் மட்டுமே, புதிய பதிவு மேற்கொள்ளப்படும். இதில், வேறுபாடு இருந்தால், தற்போது தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும்.
கடந்த 2018 பிப்., 13க்கு பின் பதிவான ஆவணங்களுக்கு மட்டுமே, இது தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிற ஆவணங்களுக்கு இது விரிவுபடுத்தப்படுமா என்பது பின்னர் தெரியவரும். சென்னை நந்தனத்தில் உள்ள, சைதாப்பேட்டை இணைப்பு 1 சார் - பதிவாளர் அலுவலகத்தில், இந்த புதிய வசதியை துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.