'புதிய குற்றவியல் சட்டங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்'
'புதிய குற்றவியல் சட்டங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்'
'புதிய குற்றவியல் சட்டங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்'
ADDED : ஜூன் 24, 2024 06:17 AM

செங்கல்பட்டு : ''புதிதாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்; நீதி வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்,'' என, மத்திய சட்டத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பேசினார்.
கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், 'பாரதிய நியாய் சன்ஹிதா- - 2023, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா- - 2023, பாரதிய சாக்ஷிய அதிநியம் - 2023' என்ற மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் புதிய சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரங்கள் துறை சார்பில், புதுடில்லி, கவுகாத்தி, கோல்கட்டா நகரங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசுடன் இணைந்து, 'குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில், இந்தியாவின் முற்போக்கான பாதை' என்ற தலைப்பில், ஒரு நாள் கருத்தரங்கம், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலையில் நேற்று நடந்தது.
இந்தக் கருத்தரங்கில், மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பேசியதாவது:
நம் சட்ட அமைப்பு, காலனித்துவ ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை.
அவை, இந்தியாவின் நெறிமுறைகள் மற்றும் சமூக யதார்த்தங்களை புறக்கணித்தன. தற்போது, நாட்டில் சரியான சட்ட நடைமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும், நான்காண்டு ஆய்வு, விரிவான ஆலோசனை மற்றும் விவாதங்களுக்குப் பின் உருவாக்கப்பட்டவை.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இந்த மூன்று சட்டங்களும், நவீன குற்றவியல் நீதி அமைப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
மூன்று புதிய சட்டங்களும், சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகளுக்கு பின், நாடு அதன் சொந்த நீதி முறைமைக்கு மாறியுள்ளது. காலனித்துவ கால சட்டங்களை மாற்றி அமைக்கும் முக்கிய முன்முயற்சி இது.
தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாக கருதப்படும். எனவே, இந்தப் புதிய சட்டங்களால் துரிதமாக நீதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கு நிகழ்வில், தமிழக கவர்னர் ரவி, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆரதே, கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிஷ் ஜிதேந்திர தேசாய் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்த கலந்துரையாடல் நடந்தது.
இதில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.