'நீட்' தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி: 650 எடுத்தாலும் அரசு கல்லுாரி கிடைக்காது
'நீட்' தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி: 650 எடுத்தாலும் அரசு கல்லுாரி கிடைக்காது
'நீட்' தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி: 650 எடுத்தாலும் அரசு கல்லுாரி கிடைக்காது
ADDED : ஜூன் 08, 2024 12:17 AM

சென்னை: ''நீட் தேர்வில் கருணை அடிப்படையில், பலர் அதிக மதிப்பெண் பெற்று உள்ளதால், 650 மதிப்பெண் பெற்றவர்களாலும், அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் கூறியதாவது:
இந்தாண்டு நீட் தேர்வு எழுதியவர்களில் 67 பேர், 720க்கு 720 என, முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். 2021ல் மூன்று பேரும், 2022ல் ஒருவரும், 2023ல் இரண்டு பேரும் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்தாண்டு 67 பேர் பெற்றிருப்பது, நீட் தேர்வின் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
இதில், ஹரியானா மாநிலம் பரீதாபாத் என்ற நகரத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்த ஏழு பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஏழு பேரின் வரிசை எண்களும் தொடர்ச்சியாக உள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
நீட் தேர்வுக்கான மொத்த வினாக்கள் 180. ஒவ்வொரு சரியான வினாக்களுக்கு, 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு, 5 மதிப்பெண் குறைக்கப்படும். இதன்படி, 720 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில், 718 மற்றும் 719 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால், 716 மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். தவறாக பதில் அளித்து இருந்தால், 715 மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 718, 719 எவ்வாறு வழங்கப்பட்டது என்று தெரியவில்லை.
இதனால், பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு, தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.
கருணை மதிப்பெண் வழங்கும் முறை எப்போது துவங்கப்பட்டது; யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.
நேரப் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிடவில்லை.
நீட் தேர்வு எழுதிய 23.33 லட்சம் பேரில், எத்தனை பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்று கூறாமல் இருப்பது நியாயமில்லை.
இதனால் இந்தாண்டு, 650 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட, அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம். இந்த குழப்பங்களுக்கு, தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.