அரசு பள்ளிகளின் இணையதள கட்டணம்; உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த உத்தரவு
அரசு பள்ளிகளின் இணையதள கட்டணம்; உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த உத்தரவு
அரசு பள்ளிகளின் இணையதள கட்டணம்; உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த உத்தரவு
ADDED : மார் 12, 2025 01:33 AM
சென்னை: 'அரசு பள்ளிகளுக்கான இணையதள வசதி கட்டணத்தை, சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன் பிறப்பித்துள்ள அரசாணை:
தமிழகத்தில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ், 24,338 தொடக்கப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் 3,094 உயர்நிலைப் பள்ளிகள், 3,129 மேல்நிலைப் பள்ளிகள் என, 37,553 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.
இவற்றில், திறன்மிகு வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றுக்கு, பி.எஸ்.என்.எல்., வாயிலாக இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இணையதள வசதி நிறுவுதலுக்கான ஒரு முறை கட்டணம் மற்றும் ஆண்டு செலவீட்டு கட்டணம் போன்றவற்றை, உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தொடக்க கல்வி இயக்கக பள்ளிகளுக்கு, 165.41 கோடி ரூபாய்; பள்ளிக்கல்வி இயக்கக பள்ளிகளுக்கு, 23.70 கோடி ரூபாய் என, மொத்தம், 189.11 கோடி ரூபாயை, உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டும்.
அதேநேரம், பேரூராட்சி ஆளுகைக்கு உட்பட்ட, அரசு பள்ளிகளுக்கான இணையதள கட்டணமான 5.49 கோடி ரூபாயை, 2025 - 26ம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இருந்து பெற்று, பள்ளிக்கல்வி இயக்குனர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.