எலத்துாரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி; 10 மாத பீதி நிஜமானதால் மக்கள் அச்சம்
எலத்துாரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி; 10 மாத பீதி நிஜமானதால் மக்கள் அச்சம்
எலத்துாரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி; 10 மாத பீதி நிஜமானதால் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 02, 2024 11:14 PM
ஓமலுார்: சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட எலத்துார் காப்புக்காடு அடிவார பகுதியில் மூக்கனுார், எலத்துார், தொட்டியனுார், குண்டுக்கல், காரவள்ளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், அடிக்கடி ஆடுகள் காணாமல் போவதாக, விவசாயிகள் கூறி வந்தனர்.
கடந்த, 2023 ஆகஸ்டில் எலத்துார் காப்புக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், கால்நடைகளை அது தான் கொல்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். டேனிஷ்பேட்டை வனத்துறையினர் கேமரா பொருத்தியும், கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்கவில்லை.
அதே சமயம், 50 கி.மீ., சுற்றளவே கொண்ட, சமதளமான எலத்துார் காப்புக்காட்டை வாழ்விடமாக மாற்றிக்கொண்டது சிறுத்தை. இரை தேவைப்படும் போது மட்டும், மறைவிடத்தில் இருந்து வந்து, கண்ணில் தென்படும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவற்றை அடித்து கொன்று வந்தது.
கடந்த வாரம் மேச்சேரி, காட்டுவளவு பகுதியில் ஒரு மாட்டை கடித்தது. மறுநாள் எலத்துார், காமராஜர் நகரில் ஒரு நாயை கொன்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு, காடையாம்பட்டி தாலுகா, கோம்பைகாடு பகுதியில் விவசாயி சீனிவாசனுக்கு சொந்தமான பசு மாட்டை கொன்றது. இதனால், மக்கள் பீதி அதிகரித்தது.
தொடர் புகாரால் சம்பவ இடத்தை, சேலம் மண்டல உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், காடையாம்பட்டி தாசில்தார் ஹசினா பானு நேற்று பார்வையிட்டனர். மாட்டின் கழுத்தில் பதிவாகியிருந்த பல் அளவு, தோட்டங்களில் பதிவான கால் தடங்களை வைத்து, கடித்த விலங்கு சிறுத்தை என்பதை உறுதி செய்தனர்.
பத்து மாதமாக விலங்குகளை வேட்டையாடும் மர்ம விலங்கு, இந்த சிறுத்தை தான் என்பது உறுதியானதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார் கூறுகையில், ''சிறுத்தையை விரைவில் பிடித்து விடுவோம். இரவு நேரத்தில் மக்கள் வெளியே வர வேண்டாம். அதிகாலை நேரத்தில் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். கண்காணிப்பு கேமரா, ட்ரோன் கருவிகளுடன் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவர்,'' என்றார்.