மூன்று பெண் போலீஸ் தற்கொலை: அறிக்கை தர ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவு
மூன்று பெண் போலீஸ் தற்கொலை: அறிக்கை தர ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவு
மூன்று பெண் போலீஸ் தற்கொலை: அறிக்கை தர ஐ.ஜி.,க்களுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 04, 2024 03:47 AM

சென்னை: 'திருமணமான மூன்று பெண் போலீசார், அடுத்தடுத்து தற்கொலை செய்த விவகாரம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, ஐ.ஜி.,க்களுக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த பெண் போலீஸ் புவனேஸ்வரி, 25. இவர், திருமணமான ஓராண்டில் தற்கொலை செய்தார்.
சென்னை ராயபுரம் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் பிரியங்கா, 27, அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் சேகர், 30, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். நான்கு மாதங்களில் தற்கொலை செய்தார். கோவையில் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த அஞ்சலி, 29, என்பவரும் தற்கொலை செய்தார்.
மே மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து, திருமணமான மூன்று பெண் போலீசார் தற்கொலை செய்துள்ளனர்.
இதற்கு கணவருடன் கருத்து வேறுபாடு, குழந்தையின்மை என, பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய நிலையில் காவல் துறை உள்ளது. பெண் போலீசார் தற்கொலை குறித்து, 'ஆன்லைன்' வீடியோ அழைப்பு வாயிலாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்த உத்தரவு:
பணிச்சுமை, மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தில் இருக்கும் பெண் போலீசாருக்கு, மகிழ்ச்சி திட்டம் வாயிலாக, 'கவுன்சிலிங்' தரப்பட்டதா; அவர்களுக்கான பிரச்னைகள் குறித்து தெரிவிக்க குறை கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதா; அவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்காதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.