கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு தகவல்
கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு தகவல்
கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை; ஐகோர்ட்டில் அரசு தகவல்
UPDATED : ஜூன் 15, 2024 04:47 AM
ADDED : ஜூன் 14, 2024 10:09 PM

சென்னை:கார்களில் கட்சி கொடி கட்டப்படுவதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தனியார் வாகனங்களில், 'காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில் இருந்து, டாக்டர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலர் டாக்டர் கே.சீனிவாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது' என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை, ஜூலை 2க்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி கூறியதாவது:
கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கப்பட்டும், அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டிய கார்கள் வலம் வருகின்றன. கார்களில் இன்னும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
சுங்கச் சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று தனி வழி இருந்தும், அது முறைப்படுத்தப்படவில்லை. நகர சாலைகளில், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனி வழி ஏற்படுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க, பள்ளி, கல்லுாரி அளவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.