கோவில்களில் அறங்காவலர் நியமனம் அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
கோவில்களில் அறங்காவலர் நியமனம் அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
கோவில்களில் அறங்காவலர் நியமனம் அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ADDED : ஜூன் 20, 2024 02:04 AM
சென்னை:'கோவில்களில் அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது?' என, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
4,000 கோவில்கள்
அப்போது, 'இன்னும் பல கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை' என, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி கூறியதாவது:
மொத்தம், 31,163 கோவில்களில் அறங்காவலர் நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இவற்றில், 10,563 கோவில்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை, 6,814 கோவில்களில் அறங்காவலர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், 3,749 கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன; 20,600 கோவில்களில் அறங்காவலர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால், 4,000 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. பெறப்படும் விண்ணப்பங்களை விரிவாக ஆய்வு செய்து, நியமனம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, 'குறிப்பிட்ட காலக்கெடுவில் அறங்காவலர் நியமனம் தொடர்பான பணிகளை முடிக்க முடியாததால், நியமன பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின், அறங்காவலர் நியமனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் விபரங்களை சமர்ப்பிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தக்கார் நியமனம்
கோவில்களில் தக்காராக நியமிக்கப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை நீக்கக் கோரியும், தக்கார் நியமனம் தொடர்பாக தகுதியை நிர்ணயித்து விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த வழக்கில், தக்கார்களுக்கு கல்வித் தகுதியை நிர்ணயித்து ஏன் விதிகளை வகுக்கக் கூடாது என, அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.