கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம் ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம் ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
கோடநாடு எஸ்டேட்டில் விதிமீறிய கட்டடம் ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
ADDED : ஜூன் 08, 2024 02:07 AM

சென்னை:கோடநாடு எஸ்டேட்டில் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, 2007ல் கோத்தகிரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பொன்தோஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
'உரிய அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டதால் அதற்கான வரியை செலுத்த வேண்டும். மேலும், விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க வேண்டும்' என, அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'எஸ்டேட்டில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை' எனக் கூறி நோட்டீசை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோத்தரிகி ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கோடநாடு எஸ்டேட்டுக்குள் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து யாரும் உள்ளே நுழைய முடிவதில்லை. அங்கு சொத்து வரியை விதிப்பது தொடர்பாக ஆய்வு நடத்த மட்டுமே அனுமதி கேட்கப்படுகிறது. அப்போது தான், கூடுதல் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக என்ற களநிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும், என்றார்.
இதை ஏற்க மறுத்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், 2023ம் ஆண்டு வரையில் கோடநாடு எஸ்டேட் சார்பில் செலுத்தப்பட்ட சொத்து வரி தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
தொடர்ந்து, எஸ்டேட்டில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தனி நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார், என்றார்.
அப்போது நீதிபதிகள், 'எஸ்டேட்டுக்குள் ஆய்வு நடத்தப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள். ஆய்வு செய்தால் தானே விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும' என்றனர்.
இதற்குப் பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், '2021ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆய்வு என்ற பெயரில் எஸ்டேட்டுக்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கோடநாடு எஸ்டேட்டில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தலாம். அவ்வாறு ஆய்வு நடத்துவதற்கு அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது. ஆய்வை நடத்தும் போது அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது' எனத் தெரிவித்து, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.