பயங்கரவாதிகள் தப்பிக்க உதவியா? தலைமை காவலரிடம் விசாரணை
பயங்கரவாதிகள் தப்பிக்க உதவியா? தலைமை காவலரிடம் விசாரணை
பயங்கரவாதிகள் தப்பிக்க உதவியா? தலைமை காவலரிடம் விசாரணை
ADDED : ஜூலை 10, 2024 01:45 AM
சென்னை:'போலி பாஸ்போர்ட்டில், வெளிநாடுகளுக்கு பயங்கரவாதிகளை தப்பிக்க விட்டாரா' என்ற கோணத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட தலைமை காவலரிடம் விசாரணை நடக்கிறது.
சமீப காலமாக, சென்னை சர்வதேச விமான நிலையம், தங்கம், போதை பொருள் கடத்தல் மையமாக மாறி வருகிறது. 60 நாட்களில் 127 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்க கடத்தல் நடந்துள்ளது. தமிழக காவல் துறையில் இருந்து, அயல் பணியாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமை துறைக்கு மாற்றப்பட்ட, தலைமை காவலர் சரவணன், சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது நடவடிக்கைகள் குறித்து, குடியுரிமை துறையில் செயல்படும், 'விஜிலென்ஸ்' அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அவர், சட்ட விரோதமாக செயல்படும் டிராவல் ஏஜென்ட்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்தனர்.
அதுபற்றி, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் செயல்படும் குடியுரிமை துறையின் தலைமை கமிஷனருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், தலைமை காவலர் சரவணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து, குடியுரிமை துறை அதிகாரிகள் கூறியதாவது:
போலி ஆவணங்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும், டிராவல் ஏஜென்ட்களுடன் சரவணனுக்கு ரகசிய தொடர்பு இருந்துள்ளது. அதுபற்றி தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வருவோர் மற்றும் செல்வோரை, குடியுரிமை துறை அதிகாரிகள் சோதனை செய்த பின் தான், சந்தேகம் இருப்பின் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பர்.
சரவணன், தங்கம் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தாரா; பயங்கரவாதிகள் போலி பாஸ்போர்ட் வாயிலாக வெளிநாடுகளுக்கு தப்பிக்க உதவி செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
சரவணனின் மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடக்க உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.