கோவை, திருப்பூர், தேனி உள்பட 5 மாவட்டங்களில் 22ல் கனமழை
கோவை, திருப்பூர், தேனி உள்பட 5 மாவட்டங்களில் 22ல் கனமழை
கோவை, திருப்பூர், தேனி உள்பட 5 மாவட்டங்களில் 22ல் கனமழை
ADDED : ஜூன் 18, 2024 10:26 PM
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தென்மாநில பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வரும் 21 வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 22ல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த, ஐந்து நாட்களுக்கு இயல்பை ஒட்டியே வெப்ப நிலை பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு, 35 முதல் 45, கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சில நாட்களாக வெயில் வாட்டியது. இதனால், வெளியில் செல்லவே மக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் துவங்கி, நேற்று அதிகாலை வரை, பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.
சோழிங்கநல்லுார், 12; பூந்தமல்லி 11; சோளிங்கர், 9; பள்ளிக்கரணை, ஆர்.கே.பேட்டை, கொளப்பாக்கம், மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம், ஆலந்துார், ஆவடி தலா, 7; பெருங்குடி, வாலாஜா, குன்றத்துார், ஆலந்துார், தாம்பரம் பகுதிகளில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.