நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள தாசில்தார்கள் வாயிலாக அனுமதி
நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள தாசில்தார்கள் வாயிலாக அனுமதி
நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள தாசில்தார்கள் வாயிலாக அனுமதி
ADDED : ஜூன் 18, 2024 10:26 PM
சென்னை:நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 15,000த்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டிலும், பல்வேறு நீர்நிலைகள் உள்ளன.
இந்த நீர்நிலைகளை முழுமையாக துார்வாரி ஆழப்படுத்தினால், வரும் காலங்களில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் குறைந்த நிதியில், அவற்றை புனரமைப்பது யானை பசிக்கு சோளப்பொரி என்ற அளவில் உள்ளது.
எனவே மாற்று ஏற்பாடாக, நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை, விவசாய பணிகள் மற்றும் மண்பாண்டம் தயாரிப்பு உள்ளிட்டவற்றிற்கு இலவசமாக வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது.
முன்னர், இதற்கான அனுமதி மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது. இதில், பல நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், துார்வாரும் பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், நீர்நிலைகளில் வண்டல் மண்ணை அகற்றி, வேளாண் பணிகளுக்கு எடுத்து செல்வதற்கான அனுமதியை, தாசில்தார்கள் வாயிலாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார்கள் வாயிலாக பணிகளை மேற்கொள்ளும் போது, அதிகளவில் மண்ணை அகற்றினால், நீர்நிலைகளின் கரைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, நீர்வளத்துறை நிர்ணயம் செய்து, 'மார்க்கிங்' செய்து தரும் பகுதியில் மட்டுமே மண்ணை எடுப்பதற்கு அனுமதி வழங்க, தாசில்தார்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.