அரசு உதவி பெறும் பள்ளிகள் வாசிப்பு இயக்கத்தில் புறக்கணிப்பு
அரசு உதவி பெறும் பள்ளிகள் வாசிப்பு இயக்கத்தில் புறக்கணிப்பு
அரசு உதவி பெறும் பள்ளிகள் வாசிப்பு இயக்கத்தில் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 21, 2024 03:57 AM

ராமநாதபுரம் : -தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பொருட்டு வாசிப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளிடம் இயல்பாக பேசவும், உரையாடவும், வாசிப்பு தான் வாசலாக அமையும். வாசிப்பின் வழியாக சமூக சிந்தனையை துாண்டவும், உணர்வுகளை வெளிக்கொண்டு வரவும் வாசிப்பு இயக்கத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் செயல்படுத்தி வருகிறது.
இதனடிப்படையில் சிறு, சிறு படைப்புகளை உருவாக்கும் விதம் முதன்மை கருத்தாளர்கள்,கருத்தாளர்கள், ஆசிரியர் மற்றும் சிறுவர்களுக்கான எழுத்தாளர்களை கொண்டு பல கட்டங்களாக பணிமனைகள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிப்பு இயக்கத்திற்காக தற்போது 70 கதை புத்தகங்கள் மற்றும்ஒரு வாசிப்பு இயக்க கையேடு அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த வாசிப்பு இயக்கம் நடத்தப்படவில்லை. அவர்களுக்கு கதை புத்தகங்கள் மற்றும் கையேடு வழங்கவில்லை.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வாசிப்பு இயக்கம் நடத்தாமல் புறக்கணிப்பது நியாயமா என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். சமத்துவம், சமூக நீதி பேசும் தமிழக அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை புறக்கணித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வாசிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.