Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கோவில் நிலங்களில் கொள்ளை போன ரூ.198 கோடி கனிமவளம்

கோவில் நிலங்களில் கொள்ளை போன ரூ.198 கோடி கனிமவளம்

கோவில் நிலங்களில் கொள்ளை போன ரூ.198 கோடி கனிமவளம்

கோவில் நிலங்களில் கொள்ளை போன ரூ.198 கோடி கனிமவளம்

ADDED : ஜூலை 21, 2024 03:28 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்களில் இருந்து, சட்டவிரோதமாக 198 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று, வரும் 26ல் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் கனிம வளங்கள் திருட்டு நடப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உத்தரவு


இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது.

கிருஷ்ணகிரியில் உள்ள அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதை பரிசீலித்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உதவி ஆணையரின் அறிக்கை, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கோவில் நிலங்களில், நுாற்றுக்கணக்கான கோடி மதிப்பில், சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

தேன்கனிகோட்டை, நாகமங்கலத்தில் உள்ள ஹனுமந்தராயசாமி கோவில் நிலத்தில், 28.51 கோடி ரூபாய் மதிப்பிலும்; கிருஷ்ணகிரி, பலேகுலியில் உள்ள பட்டாளம்மன் கோவில் நிலத்தில், 170.14 கோடி ரூபாய் மதிப்பிலும் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை


அறநிலையத் துறை அதிகாரிகளால் கூட, கோவில் நிலத்துக்குள் நுழைய முடியவில்லை; அவர்களை கடமையாற்ற விடாமல், சமூக விரோதிகள் தடுக்கின்றனர். இந்த நிலையை, அரசு அனுமதிக்கக் கூடாது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பெரும் அளவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்படுவதாகவும், நுாற்றுக்கணக்கில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை, அப்படியே ஒதுக்கி விட முடியாது.

அதனால் தான், சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுப்பதற்கு எதிராக, அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

தேசத்தின் சொத்தை பாதுகாக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. தேசத்தின் சொத்தை, பேராசைக்காரர்கள் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது.

அறநிலையத் துறையின் அறிக்கையில் உள்ள தீவிரத்தை பரிசீலித்து, நீதிமன்றத்தில் ஆஜராக சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

விபரம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்கள் மற்றும் இதர நிலங்களில் நடந்துள்ள சட்டவிரோத கனிமவள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் பதிவு உள்ளிட்ட விபரங்களையும் அளிக்க வேண்டும்.

இந்த உத்தரவு குறித்து, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உடனடியாக சிறப்பு பிளீடர், கூடுதல் பிளீடர் தெரியப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், சேலம் சரக டி.ஐ.ஜி., வரும் 26ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us