ரேஷன் கடை ரசீதில் அரசு மானிய விபரம்
ரேஷன் கடை ரசீதில் அரசு மானிய விபரம்
ரேஷன் கடை ரசீதில் அரசு மானிய விபரம்
UPDATED : ஜூன் 15, 2024 04:33 AM
ADDED : ஜூன் 15, 2024 01:19 AM

சென்னை:ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும் ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவு துறை வெளியிடுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. அரிசி, கோதுமையை இந்திய உணவு கழகத்திடம் இருந்து குறைந்த விலையிலும்; மற்ற பொருட்களை, சந்தை விலையிலும் அரசு வாங்குகிறது.
உணவு மானியத்திற்காக மட்டும், தமிழக அரசு ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் செலவு செய்கிறது. அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், இலவச அரிசி தவிர்த்து, மற்ற பொருட்களை வாங்குகின்றனர்.
அந்த அரிசியை விற்றது போல் பதிவு செய்து, ரேஷன் ஊழியர்கள் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்கின்றனர்.
இது தொடர்பாக, கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு விரல் ரேகை பதிவு, பிரின்டர் ரசீதுடன் கூடிய புதிய விற்பனை கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர, விழிரேகை சரிபார்ப்பு கருவியும் வழங்கப்படுகிறது.
பொருட்களை விற்கும் போது வழங்கப்படும் ரசீதில், ரேஷன் கார்டு எண், நுகர்வோர் பெயர், பொருட்கள் விற்பனை அளவு, அதற்கான தொகை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மொத்த தொகையில் கார்டுதாரர் வழங்க வேண்டியது, தமிழக அரசின் மானியம் எவ்வளவு என்ற விபரம் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏழை மக்கள் பயன் பெறவே, ரேஷனில் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சிலர், அந்த பொருட்களின் மதிப்பு தெரியாமல், கடை ஊழியர்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறுவதால் தான், பல முறைகேடு நடக்கிறது.
இதை தடுக்கவே தற்போது ரசீதில், ஒவ்வொரு பொருளுக்கும் அரசு எவ்வளவு செலவழிக்கிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. அதை பார்த்து, அரசுக்கு ஏற்படும் செலவை கார்டுதாரர்கள் அறிந்து கொள்ள முடியும். ரேஷன் கடைகளில் தவறு நடந்தால், ரசீதில் உள்ள தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.