ரசிகர் கொலையானது எப்படி? தர்ஷன், தோழி வாக்குமூலம்!
ரசிகர் கொலையானது எப்படி? தர்ஷன், தோழி வாக்குமூலம்!
ரசிகர் கொலையானது எப்படி? தர்ஷன், தோழி வாக்குமூலம்!
ADDED : ஜூன் 15, 2024 02:12 AM

பெங்களூரு, ரசிகர் கொலை தொடர்பாக, கன்னட நடிகர் தர்ஷனும், பவித்ரா கவுடாவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன், 47. இவரது தோழி பவித்ரா கவுடா, 34. இவருக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவர் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பிதால், அவரை அடியாட்கள் உதவியுடன் அடித்து கொலை செய்து, உடலை சாக்கடை கால்வாயில் வீசினர்.
இந்த கொலை தொடர்பாக அன்னபூரனேஸ்வரி நகர் போலீசார், தர்ஷன், பவித்ரா உட்பட 18 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
வழக்கில் பவித்ராவை முதல் குற்றவாளி, தர்ஷனை இரண்டாவது குற்றவாளியாக சேர்த்துள்ளனர். ஆனால், இவர்களை முறையே 16, 17வது குற்ற வாளிகளாக மாற்றும்படி, செல்வாக்குமிக்க காங்., அமைச்சர் ஒருவரிடம் இருந்து தொடர்ந்து நெருக்கடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில் பவித்ரா கவுடா அளித்த வாக்குமூலம்:
எனக்கு ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்புவது பற்றி, எங்கள் வீட்டில் வேலை செய்த பவனிடம் கூறினேன். 'இது பற்றி தர்ஷனிடம் கூற வேண்டாம்; அவரிடம் கூறினால் பிரச்னை பெரிதாகிவிடும்' என்றும் கூறியிருந்தேன். ஆனாலும், அவர் தர்ஷனிடம் சொல்லி விட்டார்.
ரேணுகாசாமியை பெங்களூரு அழைத்து வந்திருப்பது பற்றி அறிந்ததும், பட்டனகரே ஷெட்டிற்கு சென்றேன். எனக்கு எதற்காக ஆபாச குறுந்தகவல் அனுப்பினாய் என்று கேட்டு, அவரை செருப்பால் அடித்தேன். பின் அங்கிருந்து சென்றுவிட்டேன். கொலை செய்வர் என்று தெரிந்திருந்தால், ரேணுகாசாமி மீது போலீசில் புகார் அளித்திருந்திருப்பேன்.
இவ்வாறு பவித்ரா கூறியுள்ளார்.
தர்ஷன் வாக்குமூலத்தில், 'ரேணுகாசாமிக்கு அறிவுரை கூற நினைத்து தான், சித்ரதுர்காவில் இருந்து அவரை பெங்களூரு அழைத்து வர சொன்னேன்.
'இனி இப்படி செய்யக்கூடாது. செய்தால் வேறு மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன்' என தெரிவித்து உள்ளார்.
பவன் அளித்த வாக்கு மூலத்தில், 'ரேணுகாசாமியை பெங்களூரு அழைத்து வந்து தாக்கினோம். அவர் மயங்கி விழுந்து இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அவர் உயிரிழந்தது அதிர்ச்சியாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.
ரேணுகாசாமி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தர்ஷன் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், அவருடன் இருந்தவர்கள், 'மர்ம உறுப்பில் தர்ஷன் தாக்கியதால் தான் ரேணுகாசாமி இறந்தார்' என்று கூறியுள்ளனர். இதனால், தர்ஷனுக்கு எதிரான ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான அனுகுமார் என்பவரது தந்தை, மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.