அரசு துறைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் வாங்க எதிர்பார்ப்பு
அரசு துறைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் வாங்க எதிர்பார்ப்பு
அரசு துறைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் வாங்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 13, 2025 11:55 PM
சென்னை:அரசின் பல்வேறு துறைகளின் தேவைகளுக்கான உணவு பொருட்களை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக விற்காமல், இடைத்தரகர்கள் வாயிலாக விற்பனை செய்யும் நடைமுறை தொடர்கிறது.
இதனால், சாகுபடி செய்த பொருட்களுக்கு உரிய லாபத்தை பெற முடியாமல், பல மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
எதிர்பார்ப்பு
எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டி, பாதுகாத்து, நேரடியாக விற்பனை செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை, வேளாண் துறையின் கீழ் இயங்கும் வேளாண் வணிகப் பிரிவு உருவாக்கி வருகிறது.
அதன்படி, 381 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்கவும், பதப்படுத்தவும், மதிப்பு கூட்டவும், 30 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், 28 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து, சென்னை, கோவை கூட்டுறவு அங்காடிகளிலும், ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்வதற்கு சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஆனால், பல உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போதிய வருமானம் இன்றி திண்டாடுகின்றன.
இதனால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்பட்ட நோக்கம் முழுமை பெறவில்லை.
எனவே, அரசு துறைகளின் தேவைகளுக்கான அரிசி, பருப்பு, சிறுதானியம், காய்கறி, எண்ணெய் ஆகியவற்றை, விவசாய உற்பத்தியாளர் குழுக்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வலியுறுத்தல்
இது குறித்து, வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில், இது தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
இந்த கோரிக்கையை அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதம்:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.
கொள்முதல்
ஹிந்து அறநிலையம், சமூக நலம், பள்ளிக்கல்வி, உயர் கல்வி, சிறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உணவு திட்டங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகளை தரமாகவும், நியாயமான விலையிலும் வழங்க, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அரசு துறைகளுக்கு தேவையான காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
இது தொடர்பான அறிவிப்பை, வேளாண் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் வேலு கூறியுள்ளார்.