கட்கரி வீடியோ நெருக்கடி; மாதந்திர 'பாஸ்' கொடுத்து ஆணையம் சமாளிப்பு
கட்கரி வீடியோ நெருக்கடி; மாதந்திர 'பாஸ்' கொடுத்து ஆணையம் சமாளிப்பு
கட்கரி வீடியோ நெருக்கடி; மாதந்திர 'பாஸ்' கொடுத்து ஆணையம் சமாளிப்பு
ADDED : ஜூலை 31, 2024 03:39 AM

சென்னை : மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் பழைய வீடியோவால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் மாதாந்திர, 'பாஸ்' வினியோகம் துவங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம், சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்கச்சாவடியை சுற்றி, 60 கி.மீ.,க்குள் வசிக்கும் உள்ளூர் வாகனங்கள், ஆதார் அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் என, லோக்சபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசிய பழைய வீடியோ, சமூக வலைதளங்கள் வாயிலாக பரவி வருகிறது.
இதனால், வாகன உரிமையாளர்கள் பலரும், ஆதார் அட்டைகளை காண்பித்து, சுங்கச்சாவடிகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை சமாளிக்க முடியாமல், சுங்க கட்டண வசூல் நிறுவனங்களும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
இப்பிரச்னை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 'பாஸ்டேக்' நடைமுறைக்கு பின், உள்ளூர் வாகனங்களுக்கு மாதந்திர பயண பாஸ் வழங்காமல், கட்டண வசூல் நடந்து வந்தது.
இந்நிலையில், அமைச்சர் பேச்சால் ஏற்பட்டுள்ள பிரச்னையை சமாளிப்பதற்காக, உள்ளூர் வாகனங்களுக்கு மாதந்திர பாஸ் வழங்கும் பணிகள், தமிழக சுங்கச்சாவடிகளில் துவங்கியுள்ளன.
குறைந்தபட்சம், 150 முதல் அதிகபட்சமாக 300 ரூபாய் வரை செலுத்தி, மாதந்திர பாஸ் பெற்றுள்ள வாகன ஓட்டிகள், எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடிகளை பயன்படுத்த முடியும்.