'மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு
'மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு
'மாஜி' அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு
ADDED : ஜூலை 08, 2024 04:36 AM

சென்னை, : போலி ஆவணம் வாயிலாக, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என எட்டு இடங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மிரட்டி மோசடி
அதில், 'எனக்கு சொந்தமாக, கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் உள்ளது.
'அந்த நிலத்தை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து, என் மனைவி, மகளை மிரட்டி மோசடி செய்துள்ளனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
புகாரை அடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், ஆதரவாளர் பிரவீன் உட்பட ஆறு பேர் மீது, கொலை மிரட்டல், நில மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்தனர்; அவர்களை கைது செய்யவும் போலீசார் முயற்சித்தனர்.ஆனால், அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இதற்கிடையில், இந்த வழக்கை ஜூன் 14ல் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதனால், கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார், ஐந்து தனிப்படைகள் அமைத்து, தலைமறைவான விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். கேரளா மற்றும் டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில், முன்ஜாமின் கோரி, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளது; உடன் இருந்து அவரை கவனிக்க வேண்டி இருப்பதால், தனக்கு முன்ஜாமின் வேண்டும் என, மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், எப்போது வேண்டுமானாலும் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உள்ளது.
சாட்சியானவர்
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், நில மோசடி தொடர்பாக, விஜயபாஸ்கரின் ஆதரவாளரான, கரூர் மாவட்டம் தாளப்பட்டி கூலிநாயக்கனுாரில் உள்ள யுவராஜ்; தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் ஆகியோரின் வீடு, செங்கல் சூளை; பத்திரப்பதிவின் போது சாட்சி கையெழுத்திட்ட ஈஸ்வரமூர்த்தியின் கவுண்டன்புதுார் வீடு உள்ளிட்ட இடங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, இரு டி.எஸ்.பி.,க்கள், ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 30க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார் குழுக்களாக பிரிந்து, சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் வடிவேல் நகரில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. அதே பகுதியில், அவருக்கு சொந்தமான தறி பட்டறையும் உள்ளது. சின்ன ஆண்டான்கோவில் பகுதியில் சாயப்பட்டறை உள்ளது.
கரூர் திரு.வி.க., நகரில் விஜயபாஸ்கரின் அறக்கட்டளை அலுவலகம், ராமானுஜம் நகரிலும் அலுவலகம் செயல்படுகிறது. அதே பகுதியில், விஜயபாஸ்கரின் ஆதரவாளர் தீபா ராஜேந்திரன் வீடு உள்ளது.
கரூர் பஸ் நிலையம் அருகே, விஜயபாஸ்கர் பெட்ரோல் பங்க், காமராஜபுரத்தில் அவரின் உதவியாளர் கார்த்திக் வீடு உள்ளது.
மனைவியிடம் விசாரணை
அந்த இடங்களிலும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, கணவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனைவியிடமும் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதேபோல, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் ரெயின்போ நகரில், விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் வீடு உள்ளது. போலீசார் அங்கு சோதனை நடத்த சென்றபோது, வீடு பூட்டிக் கிடந்தது. அதனால், திரும்பிச் சென்றனர்.
சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுந்தரம் சாலையில், சாய்கிருபா அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில், விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளது.
அங்கும் நேற்று காலை 7:15 மணியில் இருந்து, இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையில் நான்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
போலி ஆவணம் தயாரிப்பு மற்றும் நில மோசடி விவகாரம் தொடர்பாக, விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர், உதவியாளர் வீடு, அலுவலகம் என, கரூர் மற்றும் சென்னை உட்பட எட்டு இடங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.