விலை போன வேட்பாளர்கள் தே.மு.தி.க., தோற்றதன் பின்னணி
விலை போன வேட்பாளர்கள் தே.மு.தி.க., தோற்றதன் பின்னணி
விலை போன வேட்பாளர்கள் தே.மு.தி.க., தோற்றதன் பின்னணி
ADDED : ஜூன் 06, 2024 12:33 AM
சென்னை:அ.தி.மு.க., ஓட்டுகள் கைமாறியதாலும், வேட்பாளர்கள் விலை போனதாலும், திருவள்ளூர், மத்திய சென்னை தொகுதிகளில், தே.மு.தி.க., படுதோல்வியை தழுவியுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலுார், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது.
விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் களமிறங்கினார். திருவள்ளூரில் நல்லதம்பி, மத்திய சென்னையில் பார்த்தசாரதி, கடலுாரில் சிவகொழுந்து என, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் களமிறக்கப்பட்டனர்.
கடலுார் மற்றும் தஞ்சாவூரில் அ.தி.மு.க.,வினர் ஓரளவிற்கு வேலை பார்த்தனர். விருதுநகரில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஒருங்கிணைந்து வேலை செய்ததால், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், விஜயபிரபாகரன் வெற்றியை இழந்து உள்ளார்.
ஆனால், திருவள்ளூர் தொகுதியில், காங்., கட்சி வேட்பாளருக்கு தே.மு.தி.க.,வால் ஈடுகொடுக்க முடியவில்லை. ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம் ஆகிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தேர்தல் பணியில் ஆர்வம் காட்டவில்லை.
செலவுக்கு பணம் இல்லாமல் திணறிய தே.மு.தி.க., வேட்பாளரை, அ.தி.மு.க.,வின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் ஓரங்கட்டி விட்டனர்.
கடைசி நேரத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் மட்டுமின்றி, அ.தி.மு.க., நிர்வாகிகளும் தி.மு.க.,விடம் சரண் அடைந்தனர். இதனால், 2.23 லட்சம் ஓட்டுகளை பெற்று, மூன்றாம் இடத்தை பிடிக்கும் நிலைக்கு தே.மு.தி.க., தள்ளப்பட்டது.
மத்திய சென்னை தொகுதியை பொறுத்தவரை வேட்பாளர் பார்த்தசாரதி, ஆரம்பம் முதலே தேர்தல் பணியில் கவனம் செலுத்தவில்லை. தி.மு.க., - பா.ஜ., பலமான கவனிப்பை தொடர்ந்து, தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கி நின்றார். இதை உணர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளும், தேர்தல் பணி செய்யவில்லை.
தி.மு.க., - பா.ஜ.,விற்கு மறைமுகமாக தேர்தல் பணியாற்றினர். இதனால், 72,016 ஓட்டுகள் தான் தே.மு.தி.க.,விற்கு கிடைத்தன.
ஐந்து தொகுதிகளிலும் சேர்த்து 2.5 சதவீத ஓட்டுகளை மட்டுமே தே.மு.தி.க., பெற்றுள்ளதால், இந்திய தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள மாநில கட்சிக்கான அங்கீகாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது.