இன்ஜினியரிங் கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு தீர்வு: நம்பிக்கை அளித்த 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி
இன்ஜினியரிங் கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு தீர்வு: நம்பிக்கை அளித்த 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி
இன்ஜினியரிங் கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு தீர்வு: நம்பிக்கை அளித்த 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி
ADDED : ஜூலை 28, 2024 11:52 PM

சென்னை: இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங் குறித்து, பெற்றோர் மற்றும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் நடத்திய 'வழிகாட்டி' நிகழ்ச்சி விளக்கம் அளித்ததுடன், நம்பிக்கையும் ஊட்டியது.
'தினமலர்' நாளிதழ் மற்றும், 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' சார்பில், நேற்று காலை குன்றத்துாரில் உள்ள, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்திலும்; மாலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள, எஸ்.பி.ஓ.ஏ பள்ளி மற்றும் ஜூனியர் காலேஜிலும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கமளிக்கும், 'வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணா நகரில் நடந்த நிகழ்ச்சியை, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிகள் மற்றும் ஜூனியர் காலேஜின் முதல்வர் சாரதா ராமமூர்த்தி, கோவை கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நாராயணசாமி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், கல்வி ஆலோசகர் அஸ்வின் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி பவினாஸ்ரீ ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை குறித்து, தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான முன்னாள் செயலர் நாராயணசாமி, 'பவர் பாயின்ட்' வாயிலாக விளக்கமளித்தார். அவர் பேசியதாவது:
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்டஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ.,- --- பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. இதில், விருப்பமான பாடத்தையும், கல்லுாரியையும் தேர்வு செய்யும் வகையில், 'சாய்ஸ் பில்லிங்' முறை தரப்படுகிறது. மாணவர்கள் அவரவர், 'லாகின், பாஸ்வேர்ட்'டுடன், தங்களின் பக்கங்களை திறந்து, தங்களுக்கு தேவையான பாடம், கல்லுாரி உள்ளிட்டவற்றை பதிவேற்றலாம்.
இதில் அவசரப்படாமல், தங்களின் விருப்பத்தை, மூன்று நாட்கள் வரை மாற்றி அமைக்கலாம். அதாவது, ஒரு மாணவர் எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும், எத்தனை பாடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
அதனால், தனக்கான விருப்ப பாடத்தையும், கல்லுாரியையும் முதல் விருப்பமாகவும், அடுத்தடுத்த பாடங்களையும், கல்லுாரிகளையும் அடுத்தடுத்த விருப்பமாகவும் பதிவிடலாம். கல்லுாரிகளில் உள்ள பாடங்கள், அவற்றின் உள்கட்டமைப்பு, தரச்சான்றிதழ் விபரங்களை அறிந்த பின், கல்லுாரியை தேர்வு செய்வது நல்லது. கல்லுாரி, பாடப்பிரிவுக்கான குறியீட்டு எண்களை மாற்றி விடக்கூடாது.
அதன்பின், பொது ஒதுக்கீடுக்கும், அதைத்தொடர்ந்து, ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டுக்கும் பாடங்கள் தானாகவே ஒதுக்கப்படும். அதனால், அடுத்தடுத்த கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று, விருப்ப பாடத்தை தேர்வு செய்யலாம்.
விருப்ப பாடமும், கல்லுாரியும் கிடைத்து விட்டால், அதன்பின், அதை, 'லாக்' செய்து விட்டு, சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு சென்று, சான்றிதழ்களை சரிபார்த்து, கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதிபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த இடத்திலோ, அடுத்த சுற்றிலோ விரும்பும் மாணவருக்கு அந்த இடம் உறுதியாகி விடும். அதனால், முடிவெடுப்பதில் தெளிவும், துரிதமும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:
இன்ஜினியரிங் பிரிவில், நல்ல துறையில் படித்தால் நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும் என்ற நிலை மாறி வருகிறது. தற்போதெல்லாம், திறமை, புதிது புதிதாக சிந்திக்கும் திறன் உள்ளோருக்கு தான் நல்ல வேலை கிடைக்கிறது.
கடந்த, 2010ல் இரண்டு லட்சம் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். அதன்பின், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இந்தாண்டு மீண்டும், இரண்டு லட்சம் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர்.
நம் நாட்டை பொறுத்தவரை, உற்பத்தி, சேவை சார்ந்த நாடு. இங்கு பணியாற்ற மதிப்பெண் மட்டும் போதாது. நாளுக்கு நாள் பிரச்னைகளை கையாளும் திறமை, புதிய தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம், புதிய தீர்வுகளை சொல்லும் சிந்தனை திறன் தான் தேவை.
இந்திய இன்ஜினியர்கள் நன்றாக வேலை செய்கின்றனர் என, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் புரிந்துள்ளன. மென்பொருள் உருவாக்குவது, மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை, நம் நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கா வழங்குகிறது.
நம் நாட்டு மாணவர்கள், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, தகவல் சேகரிப்பு அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை விரும்பி தேர்வு செய்கின்றனர். என்றாலும், அவர்களின் தொழில்நுட்ப திறமையையும், சுயசிந்தனையையும் தான் பெரும்பாலான நிறுவனங்கள் விரும்புகின்றன.
எங்கள் கல்லுாரியில், ஒவ்வொரு செமஸ்டர் முடியும் போதும், அவர்கள் படித்த பாடத்தை சார்ந்து, ஒரு புராஜக்ட் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் போது தான், புதிதாக தேடவும், சிந்திக்கவும் துவங்குகின்றனர்.
மேலும், நாங்கள் பல்வேறு துறை சார்ந்த, 'இன்டென்ஷிப்' வாய்ப்புகளையும் வழங்குகிறோம். அது, படிக்கும் போதே, பணிபுரிவதில் உள்ள சிக்கல்களை அறிய உதவுகிறது.
முதல் இரண்டாண்டுகள் அடிப்படை தகவல்களையும், மூன்றாமாண்டில் வேலைக்கான திறமையை வளர்த்துக் கொள்வது; இறுதி ஆண்டில், 'ரெஸ்யூம்' தயாரிப்பது, நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் கையாள்வது குறித்து தெளிவடைந்து, வளாகத் தேர்விலேயே வேலைவாய்ப்பை பெற வேண்டும்.
நம் நாட்டில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தோன்றுகின்றன. அவற்றில் வேலைக்கு சேர்ந்தால், வெளிநாட்டு அளவுக்கான சம்பளம் கிடைக்காது. ஆனால், தனித்திறமையால், படிப்படியாக அதிக சம்பளத்தை பெற முடியும். கோர் இன்ஜினியரிங் படிப்புக்கு, 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. இதுபோன்ற படிப்புகளில் தன்னை ஈடுபடுத்தி, பெரிய லட்சியங்களுடன் வளர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.