தேசிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; புட்டுப் புட்டு வைக்கிறார் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
தேசிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; புட்டுப் புட்டு வைக்கிறார் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
தேசிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; புட்டுப் புட்டு வைக்கிறார் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!

கட்டுக்கதை 1
இந்த கொள்கை, தமிழக மக்கள் மீது ஹிந்தியை திணிக்கிறது.
விளக்கம்: எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று கொள்கை தெளிவாக குறிப்பிடுகிறது. பள்ளிகளில் தாய்மொழி அல்லது மாநில மொழி வழி கல்வியை பின்பற்ற வேண்டும் என்கிறது. மாநிலங்களே தங்களது தேவைக்கும், சூழலுக்கும் ஏற்ப சில திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள முழு சுதந்திரமும், நெகிழ்வு தன்மையும் இந்த கொள்கையில் உள்ளது.
கட்டுக்கதை 2
மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை சுமையானது.
விளக்கம்: மும்மொழிக் கொள்கை என்பது, இரு இந்திய மொழிகளுடன் ஒரு வெளிநாட்டு மொழியை கற்க வாய்ப்பு அளிப்பதாகும். இதில், எந்த மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
கட்டுக்கதை 3
மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி, மாணவர்கள் வடிகட்டப்படுவர்.
விளக்கம்: இது உண்மையே அல்ல. மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களே அந்த தேர்வுகளை நடத்த வேண்டுமேயன்றி, மேல் வகுப்புக்கு மாணவர்கள் செல்வதை தடுப்பதற்காக அல்ல. தேர்வு முறைகளை மாநிலங்களே தங்கள் சூழலுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். தற்போது உள்ளதை போல் 10-வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.
கட்டுக்கதை 4
‛குலக்கல்வி' முறையை தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது.
விளக்கம்: தொழிற்கல்வி முறைக்கும், 70 ஆண்டுகளுக்கு முன் ஈ.வெ.ரா., விமர்சித்த குலக்கல்வி முறைக்கும் இடையிலான வேறுபாட்டை, கற்றறிந்த அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாதது வேதனையளிக்கிறது.
கட்டுக்கதை 5
நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது.
விளக்கம்: அரசியல் அமைப்பு சட்டத்தில், கல்வி பொது பட்டியலில் உள்ளது. அதில், தேசத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக, கல்வியில் தேவையான மாற்றங்களையும், கொள்கைகளையும் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.
கட்டுக்கதை 6
இந்த கல்விக் கொள்கையில் சமூக நீதிக்கு இடமில்லை.
விளக்கம்: இந்த கொள்கை, தனிநபர்கள் தங்களது கல்வி இலக்கை அடைய சமமான வாய்ப்பு கிடைக்க வழி செய்கிறது. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் அனைவரும் எளிதாக அணுகி, சமமாக சேருவதற்கு பல்வேறு முன்முயற்சிகளை கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.
கட்டுக்கதை 7
மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும்.
விளக்கம்: இந்த கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றிய பகிரங்கமான குறிப்பு ஏதும் இல்லை. ஆனால், இட ஒதுக்கீட்டை நிராகரிக்கும் குறிப்பு ஏதும் இல்லை. ஏனெனில், இட ஒதுக்கீடு தனி சட்டத்தின் கீழ் வருகிறது. தற்போதைய ஒதுக்கீட்டு முறை நீடிக்கும் என்ற அனுமானத்தில் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.
கட்டுக்கதை 8
கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும், கல்வியை வணிகமயமாக்கவும் இக்கல்விக் கொள்கை ஊக்கமளிக்கிறது.
விளக்கம்: இப்போதே ஏராளமான கல்வி நிறுவனங்கள் கல்வி, நிர்வாகம் ஆகியவற்றில் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்குகின்றன. தன்னாட்சி அதிகாரம் பெறுவது மட்டுமே வணிகமயமாக்கலுக்கு வழிவகுத்துவிடாது.
கட்டுக்கதை 9
இந்த கொள்கை அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் அமைய ஊக்கமளிக்கிறது.
விளக்கம்: கல்வி துறையில் தனியாரின் பங்களிப்பு என்பது நம் நாட்டிற்குப் புதியதல்ல. 80 சதவீதத்திற்கும் மேலான கல்லுாரிகளும் 40 சதவீதத்திற்கும் மேலான பள்ளிகளும் தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படுபவையே.
கட்டுக்கதை 10
கல்வி கொள்கையின் பல லட்சிய திட்டங்களை நிறைவேற்ற இயலாது.
விளக்கம்: அப்படி செயல்படுத்த இயலாத திட்டங்கள் எதுவுமே கூறப்படவில்லை. 'வேர் தேர் இஸ் எ வில் தேர் இஸ் எ வே' (உறுதி இருந்தால் வழி பிறக்கும்) என்பது ஆங்கில பழமொழி. அனைவருக்கும் சின்னம்மை தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை என்று நினைத்திருந்தோமானால் இன்று சின்னம்மையை ஒழித்திருக்க முடியாது.
அவசர தேவை
மாறி வரும் சூழலை எதிர்கொண்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போட்டிபோட நம் மாணவர்களை தயார் செய்வதற்கு தேசிய கல்வி கொள்கை அவசர தேவை.