சில்வண்டுகள் ரீங்காரமிடுவதா? முதல்வருக்கு உதயகுமார் எச்சரிக்கை
சில்வண்டுகள் ரீங்காரமிடுவதா? முதல்வருக்கு உதயகுமார் எச்சரிக்கை
சில்வண்டுகள் ரீங்காரமிடுவதா? முதல்வருக்கு உதயகுமார் எச்சரிக்கை
ADDED : ஜூலை 26, 2024 12:47 AM
சென்னை:'சில்வண்டுகளை விட்டு ரீங்காரமிடுவதை, முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வீண் வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, கடந்த 19ம் தேதி சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள, அம்மா உணவகத்தில், முதல்வர் திடீர் ஆய்வு நடத்தினார். பின், அம்மா உணவகங்களை மூடி விடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளியை கிளப்பியதாக, முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.
இதை கண்டித்த பழனிசாமி, கடந்த மூன்று ஆண்டுகளில், முதல்வர், அமைச்சர், மேயர் என எவரேனும் நேரில் சென்று, அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என, கேள்வி எழுப்பினார். இது முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளை உறுத்தியதும், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மழை நீர் வடிகால் பணிகள், 90 சதவீதம் முடிந்து விட்டதாக கூறி, பருவ மழைக் காலங்களில், சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர்தான் அமைச்சர் சேகர்பாபு. தி.மு.க., அரசின் நான்கு பட்ஜெட்டிலும், வட சென்னை வளர்ச்சிக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக, சேகர்பாபு கூறினார். ஆட்சி பொறுப்பேற்று, 38 மாதங்கள் முடிந்த நிலையில், ஒரு பணிகூட முடிக்கப்படவில்லை.
தி.மு.க., அரசின் ஒரே சாதனை, மூன்று ஆண்டுகளில், தமிழக மக்கள் தலையில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை சுமத்தியதுதான். பழனிசாமி குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாத முதல்வர், சில்வண்டுகளை விட்டு ரீங்காரமிடுவதை, இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கு தெரியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.