தி.மு.க.,வின் தீவிர தேர்தல் வியூகம் வி.சி., ரவிக்குமார் மீண்டும் வெற்றி
தி.மு.க.,வின் தீவிர தேர்தல் வியூகம் வி.சி., ரவிக்குமார் மீண்டும் வெற்றி
தி.மு.க.,வின் தீவிர தேர்தல் வியூகம் வி.சி., ரவிக்குமார் மீண்டும் வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 12:20 AM
விழுப்புரம்: தி.மு.க.,வின் தீவிர தேர்தல் வியூகம் காரணமாக வி.சி., ரவிக்குமார் மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளார்.
விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., ரவிக்குமார் மீண்டும் களமிறங்கினார். அ.தி.மு.க., சார்பில் தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாக்கியராஜ், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., முரளிசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் உட்பட 17 பேர் போட்டியிட்டனர். இருப்பினும் களத்தில் வி.சி., - அ.தி.மு.க., - பா.ம.க., என மும்மனை போட்டியே நிலவியது.
தேர்தல் தேதி அறிவித்த உடனேயே, வேட்பாளர் முடிவு செய்யாத நிலையில், தி.மு.க.,வினர் தேர்தல் பணிகளை தொடங்கினர். தொகுதியை வி.சி.,கட்சிக்கு ஒதுக்கியதால், தொடக்கத்தில் தி.மு.க.,வினர் அதிருப்தியில் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனை அறிந்த ரவிக்குமார், திருமாவளவன் மூலம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட்டார்.
உஷாரான பொன்முடி, தன் மீது புகார் வரக்கூடாது என்பதை உணர்ந்து, தேர்தல் பணியில் தீவிரம் காட்டினார். தனது காரில் உதயசூரியன் சின்னத்தை கூட பொறுத்திடாத அவர், காரில் பானை சின்னத்தை நிரந்தரமாக பொருத்திக்கொண்டு பிரசாரம் மேற்கொண்டார். அவரது மகனும், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி எம்.பி.,யான கவுதசிகாமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காத நிலையில் அவர், தந்தையுடன் இணைந்து விழுப்புரத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., அதிருப்தியில் இருந்தாலும் கூட, விழுப்புரம் சட்டசபை தொகுதி முழுதும் செலவினை ஏற்றுக்கொண்டு, 10 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இடையே முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மற்றும் கூட்டணி தலைவர்களின் பிரசாரங்களும் தி.மு.க., - வி.சி., கூட்டணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
இருமுறை தொகுதியை தக்க வைத்திருந்த அ.தி.மு.க., 2ம் முறையாக தொகுதியை பறிகொடுத்துள்ளது. அ.தி.மு.க., தொகுதியில் தனி செல்வாக்கு பெற்ற பா.ம.க., அரசியல் சூழலால் பா.ஜ.,வுடன் சென்றுவிட்டதால், தே.மு.தி.க., வை மட்டும் நம்பி களமிறங்கியது. மாஜி அமைச்சர் சண்முகம், அவரது சகோதரர் ராதாகிருஷ்ணனும் களமிறங்கி தி.மு.க.,-வி.சி., கட்சிகளின் அதிருப்தி ஓட்டுகளை பெற ரகசிய பணிகளை மேற்கொண்டனர்.
இருப்பினும் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் ஆலோசனை கூட்டங்களில் காட்டிய முக்கியத்துவத்தை பிரசாரங்களில் காட்டாததால், கிராமங்களில் பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல், பா.ம.க., கூட்டணி மற்றும் சமுதாய ஓட்டுகளை நம்பி களம் இறங்கிய நிலையில், சமூதாய ஓட்டுக்களை தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் பிரித்துக் கொண்டது. மேலும், கூட்டணியின் பிரதான கட்சியான பா.ஜ.,விற்கு குறிப்பிட்ட ஓட்டு வங்கி மற்றும் தேர்தல் அனுபவம் இல்லாததும் பா.ம.க.,வை களத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது.
மாவட்டத்தில், இழந்த தனது செல்வாக்கை தக்க வைப்பதற்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கும், மாவட்ட செயலாளர் பதவியை தன்வசப்படுத்த பொன்முடி கணக்கு போட்டு, தீவிரமாக பணியாற்றியதாலும், தி.மு.க.,வின் வழக்கமான தேர்தல் களப்பணியும், ரவிக்குமாருக்கு வெற்றி வாகையை சூடித்தந்துள்ளது.