விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.,வினரை தி.மு.க., - பா.ம.க.,வினர் மிரட்டுகின்றனர்: எம்.எல்.ஏ.,க்கள் 'குற்றச்சாட்டு'
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.,வினரை தி.மு.க., - பா.ம.க.,வினர் மிரட்டுகின்றனர்: எம்.எல்.ஏ.,க்கள் 'குற்றச்சாட்டு'
விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.,வினரை தி.மு.க., - பா.ம.க.,வினர் மிரட்டுகின்றனர்: எம்.எல்.ஏ.,க்கள் 'குற்றச்சாட்டு'
ADDED : ஜூலை 02, 2024 05:46 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வினரை, தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் மிரட்டுவதாக எம்.எல்.ஏ.,க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜுனன் ஆகியோர் நேற்று விழுப்புரத்தில் கூறியதாவது: திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலத்தைக் கொண்டு தி.மு.க., வெற்றி பெற்றது. ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வாக்காளர்களை முகாமில் அடைப்பது போல ஒரு பெரிய மைதானத்தில் பந்தல் அமைத்து அதில் வாக்காளர்களை அடைத்து வைத்தனர்.
அவர்களுக்கு உணவு, பணம் வழங்கி, ஓட்டு கேட்கச் செல்லும் மற்ற கட்சி வேட்பாளர்களை சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர். அதே பாணியில் விக்கிரவாண்டி தொகுதியில், 33 அமைச்சர்கள் பண பலத்தோடும், ஆட்சி அதிகாரத்தோடும் வலம் வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் இருக்கும் ஆசூரில், அ.தி.மு.க., கிளை செயலர் கண்ணன் வீட்டிற்கு சென்ற தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசன், இரட்டை இலை சின்னத்தை அழித்து விட்டு உதயசூரியன் படத்தை வரைய வேண்டும் எனக்கூறி அவரை தாக்கி உள்ளார்.
ஆனால், கண்ணன் தாக்கியதால் கண்ணதாசன் காயமடைந்ததாக கூறி, அவர் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு நாடகமாடுகிறார். தி.மு.க.,விற்கு தேர்தல் பணியாற்றுமாறு அ.தி.மு.க.,வினரை மிரட்டுகின்றனர்.
அதேபோல, பா.ம.க.,வினரும் தொந்தரவு செய்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் இந்த நிலை தொடர்கிறது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அராஜக போக்கை கடைப்பிடிக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. அதனாலேயே, அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.