Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 300 தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்; பழங்குடியினர் பள்ளிகளுக்கு திடீர் சிக்கல்

300 தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்; பழங்குடியினர் பள்ளிகளுக்கு திடீர் சிக்கல்

300 தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்; பழங்குடியினர் பள்ளிகளுக்கு திடீர் சிக்கல்

300 தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்; பழங்குடியினர் பள்ளிகளுக்கு திடீர் சிக்கல்

UPDATED : ஜூலை 03, 2024 08:57 AMADDED : ஜூலை 02, 2024 09:43 PM


Google News
Latest Tamil News
மதுரை : தமிழகத்தில் அரசு பழங்குடியினருக்கான பள்ளிகளில் பணியாற்றிய 300 தற்காலிக ஆசிரியர்கள் அறிவிப்பின்றி நீக்கப்பட்டனர். ஏற்கனவே 450க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இத்துறை பள்ளிகளில் காலியாக கிடப்பதால் மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

அரசு பழங்குடியினர் நலத் துறையில் 212 ஆரம்ப, 49 நடு, 31 உயர், 28 மேல்நிலை என மொத்தம் 320 பள்ளிகள் உள்ளன. திண்டுக்கல், தேனி, ஈரோடு, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட மாவட்டங்களில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 28,500 மாணவர்கள் படிக்கின்றனர்.

ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து 2017ல் தனியாக பிரிந்தது முதல் இத்துறை பள்ளிகளில் 450க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உரிய கல்வித்தகுதி கொண்ட பழங்குடி இனத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோரை உரிய அறிவிப்பு செய்தும், எழுத்து, நேர்முகத் தேர்வு நடத்தியும் தற்காலிகமாக நியமித்தனர்.

இவர்கள் 6 ஆண்டுகளாக பணியாற்றி மாணவர் தேர்ச்சியை அதிகரித்தனர். இந்தாண்டு பொதுத் தேர்வுகளிலும் இத்துறை பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதித்தனர்.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு துவங்கி ஒருமாதம் பள்ளிகள் செயல்பட்ட நிலையில் 'தற்காலிக ஆசிரியர்கள் இக்கல்வியாண்டில் பணியாற்ற கூடாது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையே தொகுப்பூதியத்தில் நியமிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் இதர சமூகத்தை சேர்ந்தவர் என்ற முன்னுரிமையில் நியமிக்க வேண்டும்' என இத்துறை இயக்குநர் திடீர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் 6 ஆண்டுகளாக பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் திடீரென நீக்கப்பட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் விவேக், சங்கர சபாபதி, சுதாகர் கூறியதாவது:

இத்துறை பள்ளிகளில் ஏற்கனவே 450க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது முன்னறிவிப்பின்றி 300க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்களும் நீக்கப்பட்டுள்ளனர். 2009 முதல் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் 2017 - 2018 கல்வியாண்டு முதல் 2024 வரை பழங்குடியினர் ஆசிரியர்கள் தற்காலிகமாக தொடர்ந்து பணியாற்றினார்களே. இப்போது மட்டும் ஏன் நீக்க வேண்டும்.

சமவெளி பகுதிகளில் இருந்து மலைப்பகுதி பள்ளிகளுக்கு இதர சமூகத்தை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அதிக துாரம் பயணித்து வர தயங்குகின்றனர்.

எனவே ஏற்கனவே 6 ஆண்டுகள் பணியாற்றிய பழங்குடியினர் சமூக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து மீண்டும் நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டு மாணவர்கள் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us