பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரனுக்கு ஒருங்கிணைப்பு குழு கடிதம்
பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரனுக்கு ஒருங்கிணைப்பு குழு கடிதம்
பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரனுக்கு ஒருங்கிணைப்பு குழு கடிதம்
ADDED : ஜூன் 15, 2024 02:27 AM
சென்னை:அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைத்து, கட்சியை ஒருங்கிணைக்க, முன்னாள் எம்.பி., பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் இணைந்து, ஒருங்கிணைப்பு குழுவை துவக்கி உள்ளனர்.
இக்குழு சார்பில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா ஆகியோருக்கு, கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
மறப்போம். மன்னிப்போம் என்கிற மாபெரும் தத்துவத்தை, அனைவரும் மனதில் கொண்டு ஒன்றுபட வேண்டும் என்கிற உயரிய எண்ணமே எங்களது வேண்டுகோள். பிளவு பட்டிருந்த இயக்கத்தை, மன கசப்புகளை மறந்து, ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் ஒருங்கிணைந்ததை நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி, தமிழகத்தில் அமைய செம்மையாக பணியாற்றுவோம் என்கிற தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், ஒற்றுமை வேண்டி தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறோம்.
இதை தாங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறோம். ஒற்றுமை வேண்டும் என்கிற இந்த செயல்பாட்டினை கடமையாகக் கொண்டு செயல்படுகிறோம். பொதுவானவர்களாக நின்று ஒருங்கிணைக்கும் பணியில் மட்டும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்.
பொதுமக்களும், தொண்டர்களும் இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். இதை அன்புடன் தெரிவித்து, தங்களிடம் மேலும் பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், தங்களின் ஆலோசனைகளை பெறவும் நேரம் ஒதுக்கி தரவும். கட்சியை காக்க தங்களின் அழைப்பை எதிர்நோக்கி உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.