ரூ.300 கோடி முறைகேடு; தமிழக அரசு மீது புகார்
ரூ.300 கோடி முறைகேடு; தமிழக அரசு மீது புகார்
ரூ.300 கோடி முறைகேடு; தமிழக அரசு மீது புகார்
ADDED : மார் 12, 2025 06:15 AM
சென்னை : ''நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் எடுத்துச் செல்லும் பணிக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் கடந்த ஆண்டு வழங்கிய டெண்டரில், 300 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது,'' என, அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி
:
கடந்த 2023 ஜூலை முதல், 2025 ஜூன் வரை, நெல் மற்றும் தானியங்களை, தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு, நுகர்பொருள் வாணிப கழகம் 2023 ஜூனில் டெண்டர் விட்டது. நேரடி கொள்முதல் மையங்களில் இருந்து சேமிப்பு கிடங்குகளுக்கும், உமி நீக்கும் மையங்கள், கிடங்குகளுக்கும் நெல்லை எடுத்து செல்ல வேண்டும்.
முதல், 8 கி.மீ.,க்கு, 1 டன் நெல்லை எடுத்துச் செல்ல டெண்டர் மதிப்பான 288 ரூபாயை விட, 598 ரூபாய்க்கு, 'கிறிஸ்டி'யின் பினாமி நிறுவனங்களாக அறியப்படும் முருகா என்டர்பிரைசஸ், கந்தசாமி அண்டு கோ, கார்த்திகேயா என்டர்பிரைசஸ் நிறுவனங்களுக்கு, 2024 ஜூனில் டெண்டர் வழங்கப்பட்டது. டெண்டர் விலையை விட, 107 சதவீதம் அதிக
விலையில் வழங்கியதன் விளைவாக டன்னுக்கு, 310 ரூபாய் இழப்பு. தமிழக அரசு ஓராண்டுக்கு, 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற மதிப்பீட்டை வைத்து பார்த்தால், ஒரு பயணத்திற்கு ஆண்டுக்கு, 124 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
கொள்முதல் நிலையம், கிடங்கு, உமி நீக்கும் மையம், ரயில், கிடங்கு என, குறைந்தது நான்கு பயணங்களை கணக்கிட்டால், ஆண்டுக்கு, 496 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இரு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த டெண்டரால் அரசுக்கு, 992 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என, அறப்போர் இயக்கம் மதிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட டெண்டரில் இதுவரை, 300 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தற்போது, டெண்டரை ரத்து செய்தால், 600 கோடி ரூபாய் சேமிக்கப்படும். இந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., மாநில லஞ்ச ஒழிப்பு துறை, அமலாக்க துறை, வருமான வரி துறை, முதல்வர், மத்திய, மாநில உணவு துறை அமைச்சர்களிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. உரிய விசாரணை நடத்தி, அதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.