நகர், ஊரமைப்பு வாரியம் திருத்தி அமைப்பு
நகர், ஊரமைப்பு வாரியம் திருத்தி அமைப்பு
நகர், ஊரமைப்பு வாரியம் திருத்தி அமைப்பு
ADDED : ஜூன் 03, 2024 06:10 AM
சென்னை : நாடு முழுதும் நகரமைப்பு சார்ந்த ஆலோசனைகள் வழங்க இந்திய நகர், ஊரமைப்பு வாரியத்தை திருத்தி அமைத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் நகர மயமாதல் வெகுவாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில், ஊரக பகுதி மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்துள்ளது.
இதனால், பெருநகரங்களை ஒட்டி, புதிய புறநகர் பகுதிகள் வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில், சிறிய நகரங்கள் உருவாவதும் தொடர்கிறது. எனவே, நகர்ப்புற வளர்ச்சியை முறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்து உள்ளது.
இதற்காக, தேசிய, மாநில அளவுகளில், நகர், ஊரமைப்பு துறைகள் செயல்படுகின்றன. ஆனால், இதில் தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதாக, ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. நகர், ஊரமைப்பு துறையில், தொழில்முறை வழிகாட்டுதல்கள் அவசிய தேவையாக உள்ளது. குறிப்பாக, கல்வித்துறையில் இதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இதை கருத்தில் வைத்து, இந்திய நகர், ஊரமைப்பு வாரியத்தை திருத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை, இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பிறப்பித்து உள்ளது.
இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருத்தி அமைக்கப்பட்ட புதிய நகர், ஊரமைப்பு வாரியத்தின் தலைவராக, இந்திய நகரமைப்பு வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் என்.கே.படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மத்திய,மாநில அரசு துறைகளில் இருந்து, 2 பேர்; தொழில் முறை அமைப்புகளை சேர்ந்த, 2 பேர்; நகரமைப்பு துறை மூத்த வல்லுனர்கள், 3 பேர்; அங்கீகரிக்கப்பட்ட நகரமைப்பு துறை கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ள இருவர், பெருநகர் வளர்ச்சி குழுமங்கள் போன்ற அமைப்புகளில் இருந்து, 2 பேர்; ஏ.ஐ.சி.டி.,யை சேர்ந்த அதிகாரி ஒருவர் என, 13 பேர் இதன் உறுப்பினர்களாக இருப்பர்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வாரியத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வல்லுனர்கள், அதிகாரிகள், கல்வி நிறுவன நிர்வாகி கள் நியமிக்கப்பட்ட போதிலும், தமிழகத் தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை.
தமிழகத்தில் நகரமைப்பு துறையில், பல்வேறு நிலையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், தேசிய அளவில் அமைக்கப்படும் குழுவில், ஒருவர் கூட இடம் பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.