சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது: முத்தரசன் சப்பைக்கட்டு
சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது: முத்தரசன் சப்பைக்கட்டு
சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது: முத்தரசன் சப்பைக்கட்டு
ADDED : ஜூன் 22, 2024 05:41 AM

கள்ளக்குறிச்சி : “கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கு தெரியாது,” என, இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்களுக்கு இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் அஞ்சலி செலுத்தி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: கள்ளச்சாராயம் விற்பது புதிதல்ல. தொடர்ந்து நடந்து வருகிறது. மெத்தனால் கலந்ததால் இச்சம்பவம் நடந்தது வெளியே தெரிந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரிகளுடன் உள்ளூர் போலீசார், வருவாய் துறையினர், மதுவிலக்கு போலீசார் கூட்டணி வைத்தது தான் இந்த சோக சம்பவத்திற்கு காரணம்.
சாராய வியாபாரிகளுக்கு இருக்கும் பாதுகாப்பு வேறு யாருக்கும் இல்லை. சாராயம் விற்பதாக தகவல் கொடுத்தால், அவர் உயிரோடு இருக்க மாட்டார். ஏனெனில், சாராய வியாபாரிகளுக்கு போலீசார் உடந்தையாக இருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டராக இருந்த ஷரவன்குமார் ஜடாவத் அறிக்கை, மிக மோசமானது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கும் டி.ஜி.பி.,க்கும் தெரியாது. ஆனால் உள்ளூர் போலீசார், உளவுத்துறை போலீசாருக்கு தெரியும். வியாபாரிகள் போலீசாருக்கு மாமூல் கொடுப்பதால் காட்டிக் கொடுப்பதில்லை.
ஆனால், சாராயம் விற்பவர் குறித்து தகவல் கொடுப்பவர்களை போலீசார் கைது செய்கின்றனர். இதனால் தான் இதுபோன்ற விபரீதங்கள் நடந்துள்ளன; அவை தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.