காவிரி நீர்வரத்து 3.50 டி.எம்.சி., சரிவு
காவிரி நீர்வரத்து 3.50 டி.எம்.சி., சரிவு
காவிரி நீர்வரத்து 3.50 டி.எம்.சி., சரிவு
ADDED : ஜூன் 20, 2024 01:52 AM
சென்னை:நடப்பு நீர் வழங்கும் காலத்தின் துவக்கத்திலேயே, காவிரி நீர்வரத்து சரிந்து வருவதால், டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நீர் வழங்கும் தவணைக் காலம், ஜூன் மாதம் துவங்குவது வழக்கம்.
இந்த மாதத்தில் 9.19 டி.எம்.சி., நீரை, கர்நாடகா அணைகளில் இருந்து திறக்க வேண்டும். நடப்பு மாதம், 17ம் தேதி நிலவரப்படி, மத்திய நீர்வளத் துறையின், பிலிகுண்டுலு நீரளவைத் தளத்தைக் கடந்து, தமிழகத்திற்கு 5.20 டி.எம்.சி., நீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 1.65 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், 3.55 டி.எம்.சி., நீர் நிலுவையாகியுள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், முறைப்படி நீர் திறக்காமல், அணைகளை நிரப்பும் நடவடிக்கைகளில், கர்நாடகா அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால், பாசனத்திற்கு நீர் கிடைக்குமா என்ற கவலையில், டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம், விரைவில் கூடவுள்ளது. தமிழகத்திற்கு நீர் பெற்றுத் தருவதற்கு, இந்தக் கூட்டத்தில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.