தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கலாமா: சசிகலா ஆவேசம்
தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கலாமா: சசிகலா ஆவேசம்
தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கலாமா: சசிகலா ஆவேசம்
ADDED : ஜூன் 17, 2024 01:57 AM

சென்னை: ''அ.தி.மு.க., முடிந்து விட்டது என நினைக்க முடியாது; என் என்ட்ரி ஆரம்பித்துவிட்டது; வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம்,'' என, சசிகலா கூறினார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க., தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகிறது. அதற்கு, ஒரு சில சுயநலவாதிகள் தான் காரணம். ஜெயலலிதா ஜாதி பார்க்க மாட்டார். அப்படி ஜாதி பார்த்திருந்தால், உயர் ஜாதியைச் சேர்ந்த அவர், என்னிடம் பழகி இருக்க முடியாது.
அ.தி.மு.க.,வில் சாதாரண ஏழை கூட பதவிக்கு வரலாம். ஆனால், தி.மு.க.,வில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. தி.மு.க.,வில் குடும்பத்தில் உள்ள வாரிசுகளை பதவிக்கு கொண்டு வருவர்.
அ.தி.மு.க.,விலர் சிலர், ஒரு குறிப்பிட்ட ஜாதி அரசியலுக்குள் செல்கின்றனர். ஜாதி அரசியல் நடத்த ஆசைப்பட்டால், அவர்கள் தனியாகச் சென்று செய்யலாம்.
நான் ஜாதி பார்த்திருந்தால், பெங்களூருக்கு செல்லும்போது, பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்திருக்க மாட்டேன். அ.தி.மு.க.,வுக்கு மேற்கு மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். எனவே, எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பதால், அவருக்கு முதல்வர் பதவி தந்தேன்.
அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்று விட்டது. தானும் கெட்டு, கட்சியையும் கெடுக்கக் கூடாது.
அ.தி.மு.க., முடிந்து விட்டது என நினைக்க முடியாது; என் என்ட்ரி ஆரம்பித்து விட்டது. வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி அமைப்போம். விரைவில் பட்டிதொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது சரியில்லை. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தான்.
கோடநாடு கொலை வழக்கு ஆமை வேகத்தில் செல்கிறது. தேர்தலுக்கு தேர்தல் கோடநாடு பற்றிய பேச்சு வந்தாலும், முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
இவ்வாறு சசிகலா கூறினார்.