2026 சட்டசபை தேர்தலில் 'டிபாசிட்' வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு சவால்!
2026 சட்டசபை தேர்தலில் 'டிபாசிட்' வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு சவால்!
2026 சட்டசபை தேர்தலில் 'டிபாசிட்' வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு சவால்!
ADDED : ஜூன் 07, 2024 05:51 AM

சென்னை : வரும் சட்டசபை தேர்தலில், அண்ணாமலை போட்டியிட்டு 'டிபாசிட்' வாங்குவதற்கான பணியை இப்போதே துவங்கட்டும்,'' என அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை ஓட்டேரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, குழந்தைகள் காப்பகம் மற்றும் 10 கருணை இல்லங்களில் நேற்று நடந்தது.
தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று, உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் சேகர்பாபு பேசியதாவது: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்று காட்டிவிட்டோம். அடுத்து நம் இலக்கு 2026 சட்டசபை தேர்தல் தான். இன்று முதல், அதற்கான பணிகளை துவங்க வேண்டும்.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கொள்கையின் அடிப்படையிலேயே, துாத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழிக்கு ஓட்டுகள் கிடைத்ததே தவிர, கருணாநிதியின் மகள் என்பதற்காக இல்லை. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நான் உட்பட மற்ற அமைச்சர், மேயர் என அனைவரும், தலைவரின் உடன்பிறப்புகள் போல் குடும்பமாக செயல்படுகிறோம். தமிழகத்தில் 12 இடங்களில் பா.ஜ., இரண்டாவது இடம் பிடித்துள்ளது பற்றி, அ.தி.மு.க., தான் யோசிக்க வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப பேசக்கூடியவர். நான் சவால் விட்டு சொல்கிறேன். கோவையில், அண்ணாமலை என்ற தனிமனித பேனரில் போட்டியிட்டு இருந்தால், அவர் டிபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார். ஒரு கட்சியின் நிழலில் தான், அவர் போட்டியிட்டார்.
லோக்சபா தேர்தலைப்போல், அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அந்த தேர்தலிலும் அண்ணாமலை தனித்து போட்டியிடட்டும். டிபாசிட் தொகையை தக்கவைக்க இப்போதே அவர் பணியை துவங்கட்டும். இவ்வாறு பேசினார்.