100 இடங்களில் பஸ் ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம்
100 இடங்களில் பஸ் ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம்
100 இடங்களில் பஸ் ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம்
ADDED : ஜூன் 25, 2024 12:08 AM

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., சங்கம் சார்பில், 100 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் பல்லவன் இல்லம் முன், 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நேற்று காலையில் துவங்கியது. தாம்பரம், வடபழனி, திருவான்மியூர், ஆவடி, திருவொற்றியூர் ஆகிய ஆறு இடங்கள் உட்பட, மாநிலம் முழுதும் 100 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தை சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன், பொதுச் செயலர் ஆறுமுகநயினார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
பின், அவர்கள் கூறியதாவது:
பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, 18 மாத கால ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையான, 15,000 கோடி ரூபாயை நிர்வாகங்கள் செலவு செய்து விட்டன. இதனால், ஓய்வு பெறும் ஊழியர்கள் வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 104 மாதங்களாக வழங்கப்படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுவோம் என்ற வாக்குறுதியை, தி.மு.க., இதுவரை நிறைவேற்றவில்லை. 25,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இதனால், பஸ்களை முழுமையாக இயக்க முடியவில்லை. வேலைப்பளுவால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். சென்னையில் ஆறு இடங்களில் மினி பஸ் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையை மறைமுகமாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை, அரசு கைவிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100 இடங்களில், 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.