சாராயத்தால் ஏற்படும் பார்வையிழப்பு, உள்ளுறுப்பு பாதிப்பு நிரந்தரமாகி விடும்
சாராயத்தால் ஏற்படும் பார்வையிழப்பு, உள்ளுறுப்பு பாதிப்பு நிரந்தரமாகி விடும்
சாராயத்தால் ஏற்படும் பார்வையிழப்பு, உள்ளுறுப்பு பாதிப்பு நிரந்தரமாகி விடும்
ADDED : ஜூன் 21, 2024 07:43 AM

சென்னை : ''கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பார்வையிழப்பு மற்றும் உள்ளுறுப்பு பாதிப்பு, சிகிச்சையில் உயிர் பிழைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும்,'' என, அரசு பொதுநல டாக்டர் அ.ப.பரூக் அப்துல்லா கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பலருக்கு, கண்பார்வை இழப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு பொதுநல டாக்டர் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது: அரசு தரப்பில் விற்பனை செய்யப்படும் மது, தர பரிசோதனைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்படும். சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தில், அதை எதிர்பார்க்க முடியாது. சாராயம் காய்ச்ச, 'பேட்டரி' போன்ற பல்வேறு வகையான பொருட்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சாராயத்தின் கொதிநிலையில், 'மெத்தனால்' உருவாகும். அதை முறையாக பில்டர் செய்யும் பட்சத்தில், அதன் அளவை குறைக்க முடியும். அவ்வாறு பில்டர் செய்யாதபட்சத்தில், மெத்தனால் என்ற எரிசாராயம் அளவுக்கு அதிகமாக உருவாகியிருக்கக் கூடும்.
இதை பருகும்போது, மெத்தனால் ரத்தத்தில், 'பார்மால்டிைஹடு' ஆக மாறி, பின், 'பார்மிக்' அமிலமாக மாறி விடுகிறது. பார்மிக் அமிலம் என்பது சிவப்பு எறும்புகள் கொட்டும் போது நமக்குள் செலுத்தும் அமிலமாகும். பார்மால்டிஹைடு என்பது இறந்தவர்களின் உடல் கெடாமல் இருக்க, எம்பார்மிங் செய்ய உபயோகிக்கும் திரவம்.
கள்ளச்சாராயத்தை அருந்தியோர், 12 முதல் 24 மணி நேரத்திற்கு வரை சாதாரணமாகவே இருப்பர். அதன்பின் தான், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், பிதற்றல் நிலை, கண்பார்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். அதற்குள் சிகிச்சை பெறாவிட்டால், நிரந்தரமாக கண்பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, பார்கின்சன் போன்ற நரம்பு மண்டல பாதிப்பு, நடுக்கம், நடை தளர்வு ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும்.
சிகிச்சையில் உயிர் பிழைத்தாலும், நிரந்தர கண்பார்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, உள்ளுறுப்பு பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.