தபால் ஓட்டுகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம் அரசு ஊழியர்களின் அதிருப்தி காரணமா?
தபால் ஓட்டுகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம் அரசு ஊழியர்களின் அதிருப்தி காரணமா?
தபால் ஓட்டுகளில் பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம் அரசு ஊழியர்களின் அதிருப்தி காரணமா?
ADDED : ஜூன் 06, 2024 09:28 PM
சென்னை:தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். இதன் காரணமாக, தபால் ஓட்டு பதிவில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றாமல் உள்ளதால், அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலித்துள்ளது. வழக்கமாக தபால் ஓட்டுகளில், தி.மு.க., அதிக வித்தியாசத்தை பெறும்.
இம்முறை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும், தபால் ஓட்டுகள் அளித்தனர். இதன் காரணமாக, 3 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகின.
இதில் வழக்கத்திற்கு மாறாக, இம்முறை மற்ற கட்சிகள் கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளன. தென் சென்னை, தேனி தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி தபால் ஓட்டுகளில் முன்னிலை பெற்றது.
மொத்தம் 27 லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று, தபால் ஓட்டில் பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அரசு மீதுள்ள அதிருப்தி காரணமாக, பா.ஜ., கூட்டணிக்கு அதிகம் ஓட்டளித்துள்ளதையே இது காட்டுகிறது.
பதிவான தபால் ஓட்டுகளில், தி.மு.க., கூட்டணி 1,11,150; பா.ஜ., கூட்டணி 62,707; அ.தி.மு.க., கூட்டணி 50,241; நாம் தமிழர் கட்சி 24,318 ஓட்டுகளை பெற்றுள்ளன. தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி அதிக அளவில் தபால் ஓட்டுகளை பெற்றிருப்பது, இதுவே முதல் முறை.