Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி: அண்ணாமலை கணிப்பு

தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி: அண்ணாமலை கணிப்பு

தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி: அண்ணாமலை கணிப்பு

தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி: அண்ணாமலை கணிப்பு

ADDED : ஜூன் 06, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
சென்னை:''தமிழகத்தில் 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் இலக்கு; அதற்காக கடுமையாக உழைப்போம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஓட்டுகளை பா.ஜ., பெற்றுள்ளது. இதுவரை, தாமரை சின்னத்திற்கு ஓட்டு கிடைக்காத இடங்களில் எல்லாம் தற்போது ஓட்டுகள் கிடைத்து உள்ளன. தமிழக பா.ஜ.,வினர் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மக்கள் சொல்லி இருக்கின்றனர்.

பா.ஜ., 20 சதவீதம் ஓட்டுகள் பெற வேண்டும்; தேசிய ஜனநாயக கூட்டணி ஓட்டு, 25 சதவீதத்தை தாண்ட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அதிக ஓட்டுகளை கூட்டணி வாங்கியுள்ளது. நான் கோவையில் வாங்கிய ஓட்டுகள் அனைத்தும், பணம் கொடுத்து வாங்காதவை.

இன்று, 11 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளோம். குறுக்கு வழியில் செல்லாமல், எங்கள் பணியில் சோர்வு அடையாமல், 2026க்கு நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுள்ளோம். தமிழகத்தில், 'நோட்டா' கட்சி என்று விமர்சிக்கப்பட்ட பா.ஜ., இன்று அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ளது. வரும் காலத்தில் எங்கள் முயற்சி இரட்டிப்பாகும்.

திராவிட கட்சிகளை எதிர்த்து, தனித்து நின்று போட்டியிட்டோம். நாங்கள் செல்லக்கூடிய பாதை சரியானது. அதில் தொடர்ந்து பயணிப்போம்; செல்லும் வேகத்தை குறைக்க மாட்டோம்.

எனவே, எங்களுக்கு ஏற்பட்டதை தோல்வியாக பார்க்கவில்லை. ஓட்டு சதவீதம் அதிகமாகி இருப்பது, ஒரு விதத்தில் வெற்றி. இதுவரை சரித்திரத்தில் வாங்காத ஓட்டுகளை, கோவையில் வாங்கி இருக்கிறோம். கோவையில் அ.தி.மு.க.,வுக்கு ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், பா.ஜ.,வுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அ.தி.மு.க., கோட்டை எனப்படும் கோவையில் பா.ஜ., டிபாசிட் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 2026ல் பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் இலக்கு. தென் மாவட்டங்களில் பா.ஜ., நேர்மறையான அரசியலை கையில் எடுத்து உள்ளது.

ஒரு கட்சி படிப்படியாக தான் வளரும். எனக்கு கொடுக்கப்பட்ட பணி, கட்சியை வளர்ப்பது. அதை தான் நான் செய்கிறேன். நாளையே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமல்ல. பா.ஜ.,வை விமர்சித்த அ.தி.மு.க., தலைவரின் மகன், ஏற்கனவே எம்.பி.,யாக இருந்தும், அவர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை, மதுரை என, பல தொகுதிகளில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி வரும் என்பது என் கணிப்பு. கடந்த 2019 தேர்தலில், 33.52 சதவீதம் ஓட்டு வாங்கிய தி.மு.க., தற்போது 6 சதவீதம் இழந்துள்ளது. தி.மு.க.,வின் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு வந்து உள்ளன.

நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன்; அக்கட்சி நேர்மையாக தேர்தலை சந்தித்தது. திராவிட அரசியலில் இருந்து மக்கள் வெளியே வர ஆரம்பித்து விட்டனர் என்பதை, நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுகள் சொல்கின்றன.

என் தந்தை அரசியல்வாதி இல்லை; விவசாயி. என் தந்தை கருணாநிதியாக இருந்திருந்தால், நான் வெற்றி பெற்றிருப்பேன். நான் பதவி விலக வேண்டும் என கனிமொழி கூறுகிறார். அவர், பா.ஜ.,வுக்கு வருவதாக இருந்தால் பரிசீலிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us